உலகிலேயே இப்படி அதிர்ஷ்டம் கெட்ட கொள்ளையர்கள் இவர்களாகத்தான் இருக்கும் என்று கூறலாம்.
நேற்று மாலை, பிரித்தானியாவின் Stoke-on-Trent என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றிற்கு 42 மற்றும் 49 வயதுள்ள இரண்டு கொள்ளையர்கள் கொள்ளையடிக்கச் சென்றுள்ளார்கள்.
கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்த இரண்டு கொள்ளையர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்.
காரணம், வீட்டுக்கு வெளியே வரிசையாக பொலிஸ் வாகனங்கள் காத்திருந்திருக்கின்றன.
நடந்தது என்னவென்றால், பாக்கெட்டில் மொபைலை வைத்திருந்த கொள்ளையர்களில் ஒருவன் கீழே உட்காரும்போது, தற்செயலாக 999 என்ற பொலிசாரை அழைக்கும் அவசர உதவி எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.
கொள்ளையர்கள் பேசுவது முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த பொலிசார், அமைதியாக வந்து, கொள்ளையர்களை லபக் என கவ்விக்கொண்டு போய்விட்டார்கள்.
ட்விட்டரில் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த தலைமை பொலிஸ் ஆய்வாளர் John Owen, உலகிலேயே அதிர்ஷ்டம் கெட்ட இரண்டு கொள்ளையர்களை பிடித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.