லண்டனில் வயதான பெண் வீட்டுக்கு வந்த நபர் தான் மருத்துவ ஊழியர் என கூறிகொண்டு போலியான கொரோனா ஊசியை அவருக்கு செலுத்திவிட்டு £160 பணத்தை வாங்கி கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
தென்மேற்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த 30ம் திகதி நடந்துள்ளது.
அங்குள்ள வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டு கதவை 92 வயது பெண் திறந்தார், அப்போது அவரிடம் அந்த நபர் தான் NHS ஊழியர் எனவும் கொரோனா தடுப்பூசி செலுத்த வந்திருப்பதாகவும் கூறினார்.
இதை நம்பிய மூதாட்டி அவரை வீட்டுக்குள் நுழைய அனுமதித்தார். பிறகு ஊசியை செலுத்திவிட்டு அதற்காக £160 பணத்தை வாங்கி கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் தான் அது போலியான ஊசி எனவும், வந்து சென்றது மோசடி பேர்வழி எனவும் தெரியவந்து மூதாட்டி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், மூதாட்டிக்கு என்ன ஊசி போடப்பட்டது என தெரியவில்லை.
ஆனால் உள்ளூர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்த பிறகு எந்தவிதமான மோசமான விளைவுகளையும் காட்டவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த மோசடி நபரை விரைவில் கைது செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
ஏனென்றால் அவர் தனிமனிதர்களை பண மோசடி செய்வது மட்டும் இல்லாமல் அவரின் செயல் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது.
இதில் தொடர்புடைய குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். அவன் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.