இன்னும் சில மணி நேரத்தில் பிரித்தானியா வந்து சேரும் கொரோனா தடுப்பூசி: லண்டனில் முதல் டோஸ் யாருக்கு?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1487Shares

பிரித்தானியாவுக்கு இன்னும் சில மணி நேரங்களில் கொரோனா தடுப்பூசி வந்து சேரும் எனவும், மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாக்கப்பட இருப்பதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி Jonathan Van-Tam இன்று பகல் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பைஸர் நிறுவன கொரோனா தடுப்பூசிகளே சில மணி நேரங்களில் பிரித்தானியா வந்து சேர உள்ளது.

பெல்ஜியத்தில் அமைந்துள்ள பைஸர் தொழிற்சாலையில் இருந்து கனரக லொறி ஒன்று புறப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் பாதுகாக்கப்படும் இந்த தடுப்பூசிகள், அங்கிருந்து முக்கிய மருத்துவமனைகளுக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்படும்.

பைஸர் தடுப்பூசியானது கண்டிப்பாக -70C வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், ஒருமுறை அதை பயனபாட்டுக்கு கொண்டு வந்தால், பின்னர் அந்த தடுப்பூசியானது 2C முதல் 8C வரையான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் ஐந்து நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு பாதுகாத்து பயன்படுத்த முடியும்.

இதனிடையே எதிர்வரும் திங்கள் முதல் இங்கிலாந்தின் 53 NHS அறக்கட்டளைகளும் பைஸர் தடுப்பூசி வழங்க தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 53 NHS அறக்கட்டளைகளில் இருந்தே பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளன.

மேலும், லண்டனில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முதல் டோஸ் வழங்கப்பட உள்ளது. அது யாருக்கு என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

பெயர் வெளியிடப்படாத இந்த மருத்துவமனை உள்ளிட்ட மொத்தம் 7 மருத்துவமனைகளுக்கு லண்டனில் பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்