சமீபத்தில், சசெக்சிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் Dave Stallard என்பவரை அவரது மனைவி Irene சென்று சந்திக்க முயலும் புகைப்படம் ஒன்று வெளியானது.
Daveஐ முதியோர் இல்லத்திலிருக்கும் தோட்டத்தில் ஒரு வீல் சேரில் ஒரு செவிலியர் கொண்டு நிறுத்தியிருக்க, அவரது மனைவி சாலையோரம் உள்ள தடுப்பின் முன் முழங்காலிட்டு, அங்கிருந்து தன் கணவருடன் பேசும் காட்சியைக் கண்ட அனைத்து வயதினரையும் அந்த காட்சி கடுமையாக பாதித்தது.
ஒவ்வொருவரும், தங்களையும், தங்கள் பெற்றோரையும் அந்த புகைப்படத்தில் பொருத்திப் பார்த்து கண் கலங்கினார்கள்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய சுகாதார செயலர் Matt Hancock, தன் தாத்தாவை கொரோனா பறித்துக்கொண்டதைக் குறித்து கூறும்போது, அவர் கண்களில் கண்ணீரை தவிர்க்க தடுமாறியதை நாடே பார்த்தது.
இப்படி சொந்தங்களைக் கூட சந்திக்க இயலாமல் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்து மகிழ்கிறது இந்த கொரோனா.
இதற்கிடையில், மேலை நாட்டவர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குகிறது.
அதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான காலகட்டத்தில் கூட உறவினர்களை, அதுவும் குறிப்பாக முதியவர்களை சந்திக்கமுடியாவிட்டால், வாழ்க்கைக்கே அர்த்தமில்லையே. ஆகவே, நேற்று இரவு, முக்கியமான அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளார்கள் பிரித்தானிய அமைச்சர்கள்.
அது என்னவென்றால், முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் இனி தங்கள் உறவினர்களை சந்திக்கலாம், கைகளைப் பிடித்துக்கொள்ளலாம், ஓரிரு முறையாவது கட்டியணைத்துக்கொள்ளலாம்.
இது பிரித்தானியாவில் அனைத்து கொரோனா அடுக்குகளில் உள்ளவர்களுக்கும் பொருந்தும், ஒரு முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்று பரவல் உள்ளது என தெரிந்தால் தவிர மற்றபடி, அங்குள்ளவர்களை உறவினர்கள் சந்திக்கலாம்.
30 நிமிடத்திற்குள் சோதனை முடிவுகளைக் கொடுக்கக்கூடிய பரிசோதனைகள் செய்து, கொரோனா இல்லை என தெரியவரும் பட்சத்தில் உறவினர்கள் முதியோர் இல்லத்தில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்கலாம் (பாதுகாப்பு உடைகளுடன்) என அரசு அறிவித்துள்ளது.