அன்பிற்குரியவர்களை பிரித்து வைத்து, குடும்ப உறவுகளுக்குள் பிரிவை ஏற்படுத்திய இந்த கொரோனாவால் இந்த ஆண்டே இதுவரை மோசமானதாக அமைந்திருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
அப்படியிருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதாவது குடும்பங்கள் இணைந்திருக்கட்டும் என தான் விரும்புவதாக நேற்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
இந்த கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் கொஞ்சம் விலக்கி வைத்துவிட்டு, இந்த பண்டிகைக் காலத்தில் ஒரு ஐந்து நாட்கள் மட்டுமாவது மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் வகையில், அமைச்சர்கள் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
அதாவது, டிசம்பர் 24 முதம் 28 வரை, குடும்பங்கள், அதாவது குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டும் இணைந்து பண்டிகை கொண்டாடலாம். தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று பிரதமர் இல்லத்தில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய இங்கிலாந்து சுகாதார துறையின் மூத்த மருத்துவரான Susan Hopkins, இந்த திட்டம் சாத்தியம்தான் என தான் நம்புவதாகவும், ஆனால், கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படும் ஒவ்வொரு நாளுக்கும் இணையாக ஐந்து நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் எச்சரித்தார்.
அதாவது, ஐந்து நாட்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட இருக்கும் அதே நேரத்தில், அதற்குப்பின், 25 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்பது அதன் பொருள்.
இன்னும் விளக்கமாக கூறினால், கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடி முடித்தபின், நாடு மீண்டும் ஏதாவது ஒரு வகையில் முடக்கப்படும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பில்லை!
ஆக, இன்னொரு பக்கம், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் விரும்பினால், அதற்கு ஆயத்தமாகும் வகையில், டிசம்பரில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வகையில், அதற்காக மக்கள் என்னவெல்லாம் முயற்சிகள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்தாகவேண்டும்.
இதற்கிடையில், பிரதமர் இந்த ஐந்து நாட்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரிஸ்க் எடுப்பதாக சில நடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
நாளை நிகழவிருக்கும் இழப்புகளுக்கு பிரதமரைத்தான் எல்லோரும் குற்றம் சாட்டப்போகிறார்கள் என எச்சரிக்கிறார் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.