42 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சிலைகள்! லண்டனில் மீட்பு: தமிழக பொலிசாரிடம் ஒப்படைப்பு

Report Print Santhan in பிரித்தானியா
324Shares

லண்டனில் இருந்து 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகள் தமிழக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின், மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1978-ஆம் ஆண்டு ராமர் சீதை லட்சுமணன் சிலைகள் திருடு போயின.

இந்த சிலைகள் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்த வரலாறு மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

துாதரக அதிகாரிகள் லண்டன் பொலிசில் புகார் அளித்தனர். இந்த சிலைகள் லண்டனில் உள்ள டீலர் ஒருவரிடம் இருப்பது பற்றி சிங்கப்பூரில் வசித்து வரும் சிலைகள் மீட்பு பணிக்குழு நிர்வாகி விஜயகுமார் என்பவர் வாயிலாக பொலிசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த டீலரிடம் லண்டன் பொலிசார் விசாரித்த போது, அவர் சிலைகளை ஒப்படைத்து விடுவதாக கூறினார்.

அதன்படி 42 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன. அதன்பின் பிரித்தானியர் அரசு சிலைகளை மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது.

அந்த சிலைகளை டெல்லியில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்