இவரது தாய் ஒரு இந்தியர், தந்தை ஆங்கிலேயர்: புகழ்பெற்ற ஒருவரின் முன்னாள் மனைவியாகிய இவர் யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1608Shares

என் தாய் ஒரு இந்தியர், என் தந்தை ஒரு ஆங்கிலேயர், அப்படியானால் நான் யார்? இந்த கேள்வியை கேட்கும் பெண், மரீனா வீலர்.

இவர் யார் தெரியுமா? இவர்தான் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்னாள் மனைவி. ஆம், மரீனாவின் தாய் தீப் சிங் ஒரு இந்தியர், அவர் இந்தியாவில் பிறந்தார், ஆனால் சுதந்திரத்துக்குப் பின் அவர் பிறந்த இந்திய பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

அப்படியானால், நான் ஒரு இந்தியரா, பாகிஸ்தானியரா அல்லது ஆங்கிலேயரா என்ற கேள்வி மனதில் எழ, தனது தாயின் கதையை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் மரீனா, அது அவரது வாழ்க்கை வரலாறும் கூட!

தீப் சிங் செல்வ செழிப்புள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர். 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாடு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டது.

அவர் வாழ்ந்த பஞ்சாப்தான் அதிகம் பாதிக்கப்பட்டது. இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டார்கள், குத்தும் கொலையும், வன்புணர்வுகளுமாக அப்பகுதி வாழத்தகாத இடமாக மாறிப்போக, தீப் சிங் குடும்பம் அங்கிருந்து தப்பி புதுடில்லிக்கு சென்று புது வாழ்வைத் துவங்கியது.

ஆண்டுகள் கடந்தன, தீப் சிங்கிற்கு திருமணமானது, ஆனால் எந்த சுவையும் இல்லாத ஒரு வாழ்வாக அது இருந்தது. அடியும் உதையும் வாங்க விரும்பாமல் கணவன் வீட்டிலிருந்து பெட்டியைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார் தீப்சிங்.

வேலை ஒன்றை தேடிக்கொண்டு சொந்தக்காலில் நின்றபின், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காயம்பட்ட அந்த மனதில் காதல் துளிர்த்தது.

தீப்சிங் சந்தித்த அந்த ஆங்கிலேயர்தான் மரீனாவின் தந்தையான சார்லஸ் வீலர். திருமணத்திற்குப்பின் ஜேர்மனி உட்பட மொழி தெரியாத பல நாடுகளுக்கு பணி நிமித்தம் சென்றபோதெல்லாம், அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக்கொண்டுள்ளார் தீப் சிங்.

பல்வேறு பொறுப்புகள் ஆற்றிய நிலையிலும், நல்ல மனைவியாக தாயாக தன் குடும்பத்தை கவனித்துக்கொண்டுள்ளார் தீப் சிங்.

அவரைக் குறித்து ஒரு புத்தகம் எழுத விரும்பினார் அவரது மகள் மரீனா, ஆனால், அதை முடிக்கும்போது தீப்சிங் உயிருடன் இல்லை.

என்றாலும், இந்த புத்தகத்தை எழுதும் காலகட்டம் தங்களை முகவும் நெருக்கமாக்கியதாக கூறுகிறார் மரீனா. பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சனின் முன்னாள் மனைவியான மரீனா வீலர், ஒரு சட்டத்தரணி, எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராவார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்