குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வோருக்கு உதவும் வகையில் 20 நிமிடங்களில் கொரோனாவைக் கண்டறியும் சோதனை ஒன்று லண்டனிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹொங்ஹொங் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்குத்தான் இந்த சோதனை செய்துகொள்ளும் வசதி முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்கான கட்டணம் 80 பவுண்டுகள், சோதனை முடிவுகள் வெறும் 20 நிமிடங்களில் தயாராகிவிடும்.
சில நாடுகள், தங்கள் நாட்டுக்குள் நுழைபவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழ்களுடன் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றன.
அத்துடன், இப்போதைய சூழலில், பல நாடுகள் பிரித்தானியாவை அபாயகரமான ஒரு நாடாக பார்க்கின்றன. எனவே, பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஹொங்ஹொங்கைப் பொருத்தவரை, லண்டனிலிருந்து வரும் பயணிகள், தாங்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா இல்லை என உறுதிசெய்யப்பட்ட சான்றிதழுடன் வரவேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, இப்போது ஹீத்ரோ விமான நிலையத்தில் 2 மற்றும் 5ஆவது வாயில்களில் இந்த உடனடி கொரோனா சோதனை செய்யப்படுகிறது.
என்றாலும், இந்த சோதனை கிரீஸ், சைப்ரஸ், பஹாமாஸ் மற்றும் பெர்முடா ஆகிய நாடுகளுக்கு செல்பவர்களுக்கு போதுமானது அல்ல.
அந்த நாடுகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் PCR சோதனை செய்து, கொரோனா இல்லை என்னும் சான்றிதழைக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கிய விடயம், ஹீத்ரோ விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் இந்த சோதனை, பிரித்தானியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்குத்தான் பொருந்துமேயன்றி, பிரித்தானியாவுக்குள் வருபவர்களுக்கு பொருந்தாது!