என் தாய்மொழியில் பேசுபவர்களைக் கண்டால், அங்கிருந்து உடனே தப்பி ஓடி விடுவேன் என்கிறார் பெக்காள் மஹ்மூத் (36) என்ற இளம்பெண்.
என் கடந்த காலத்தைக் குறித்து எதுவும் கூற முடியாது, யாருக்காவது நான் யார் என்ற உண்மை தெரியவந்தால் என் உயிருக்கு ஆபத்து என்கிறார் பெக்காள்.
கடையில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கும்போது யாராவது என் தாய் மொழியைப் பேசினால் பொருட்களை வாங்காமலே வெளியேறிவிடுவேன், பேருந்து என்றால் அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிடுவேன். காபி ஷாப்பில் என் இனத்தவர்களைக் கண்டால் மாயமாகிவிடுவேன் என்கிறார் அவர்.
13 ஆண்டுகளாக பெக்காள் பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் வாழ்ந்துவருகிறார். காரணம், தன் தங்கை பனாஸை (20) தன் தந்தையும் மாமாவும் கௌரவக் கொலை செய்தபோது, அவர்களுக்கெதிராக சாட்சியமளித்தார் பெக்காள். கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமைக்கார கணவனிடமிருந்து தப்பியோடிய பனாஸ்க்கு, ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டது.
அந்த விடயம் தெரியவந்ததையடுத்து பனாஸ் சித்திரவதை செய்யப்பட்டு, வன்புணரப்பட்டு, கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டார்.
லண்டனில் வாழ்ந்த ஈராக்கியரான பனாஸை கொல்ல உத்தரவிட்டது, அவரது தந்தையும் மாமாவும். மூன்று மாதங்களுக்குப் பின் பனாஸின் காதலரான ரஹ்மத் சுலைமானி (29) அளித்த புகாரைத் தொடர்ந்து, பர்மிங்காமிலுள்ள ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றில் பனாஸின் உடலைக் கண்டெடுத்தார்கள் பொலிசார்.
பின்னர் ஈராக்குக்கு தப்பியோடிய பனாஸின் தந்தை மஹ்மத் பாபாக்கிர் (58) மாமா ஆரி மஹ்மத் (57) மற்றும் பனாஸின் உடலை மறைக்க உதவிய முகமது ஹமா (30) ஆகியோர் பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரித்தானிய வரலாற்றிலேயே கௌரவக் கொலையை எதிர்த்து குடும்பத்தினருக்கு எதிராக சாட்சியமளித்த முதல் பெண் பெக்காள்தான்.
புதிய பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பெக்காள், தன் தந்தை விடுதலையாகும் நாளை எண்ணியும் பயத்துடனேயே இருப்பதாக தெரிவிக்கிறார்.