கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன, எப்போது அமுலுக்கு வருகின்றன?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சில புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன, எப்போதிலிருந்து அமுலுக்கு வருகின்றன என்பதைக் காணலாம்.

திங்கட்கிழமை முதல் அதாவது, 14.9.2020 முதல், உங்கள் வீட்டில் இல்லாத மற்றவர்கள் யாரையாவது நீங்கள் சந்தித்தால், ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக்கூடாது.

இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன, அதாவது, வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள் முதலான இடங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் செல்லலாம், ஆனால், அங்கே நிற்கும்போது கூட, ஓரிடத்தில் ஆறு பேர் மட்டுமே நிற்கவேண்டும், அந்த ஆறு பேரில் யாரும் இன்னொரு இடத்தில் நிற்கும் ஆறு பேருடன் சேரக்கூடாது, பெரிய கூட்டங்களாக மாறிவிடவும் கூடாது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு பேருக்கு அதிகம் இருந்தாலும், அதாவது bubbles என்று கூறுகிறார்களே, அந்த குழுக்களில் உள்ளவர்கள் தங்களுக்குள் கூடுவதில் தடையில்லை.

கல்வியோ, அலுவலகங்களோ பாதிக்கப்படாது, திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளில் 30 பேர் வரை கூடலாம்.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள், திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன.

செப்டம்பர் 18 முதல் அனைத்து அலுவலகங்களும் NHS Test and Trace முறையை ஆதரிக்கவேண்டும்.

அதாவது, பரிசோதனைக்குள்ளாகும் யாராவது ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால், அவருக்கு நெருக்கமான அனைவரின் தொலைபேசி எண் முதலான விவரங்கள் சேகரிக்கப்படும், இந்த விவரங்கள் இனி அலுவலகங்களில் குறைந்தது 21 நாட்களுக்கு வைத்துக்கொள்ளப்படும்.

கொரோனா விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு அதிகாரம் அளிக்கப்படுவதுடன், புதிதாக சில அலுவலர்கள் பணிக்கமர்த்தப்பட்ட உள்ளார்கள்.

பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தும் Passenger Locator Form எளிதாக்கப்பட உள்ள அதே நேரத்தில்,

பயணிகள் அவைகளை பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் கவனிப்பார்கள்.

அக்டோபர் 1 முதல் விளையாட்டுப்போட்டிகள் முதலானவற்றை நடத்துவது குறித்து அரசு மீளாய்வுகளை மேற்கொள்ளும்.

தேவைக்கேற்ப, கொரோனா தொற்று எந்த அளவில் உள்ளது என்பதைப் பொறுத்து, கடைகள் முதலானவை எவ்வளவு நேரம் திறந்திருக்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.

இப்போதைக்கு இங்கிலாந்துக்கு மட்டும் இந்த விதிகள் அமுல்படுத்தப்பட உள்ள நிலையில், மற்ற இடங்களில் வாழ்வோருக்கு அவை மாறுபடலாம் என்பதால், உங்கள் பகுதிக்கான விதிமுறைகளை உறுதிசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்