40 மில்லியன் பிரித்தானியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வேண்டும்: தலைமை அறிவியல் ஆலோசகரின் சர்ச்சை கருத்து!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியர்களில் 40 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவேண்டும் என பிரித்தானியாவின் தலைமை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைமை அறிவியல் ஆலோசகரான Sir Patrick Vallance, பிரித்தானிய மக்கள் தொகையில் 60 சதவிகிதத்தினருக்கு, அதாவது, 40 மில்லியன் பிரித்தானியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

10 பிரித்தானியர்கள் மற்றும் உலகில் 5,000 பேரை பலிவாங்கியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பல மில்லியன் பேரால், காலப்போக்கில் நன்மை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆண்டுதோறும் திரும்பத் திரும்ப வரும் என எதிர்பார்க்கப்படுவதால், இப்படி பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாவதால், அது மொத்தமாக ஒரு கூட்டம் மக்களுக்கு அல்லது ஒரு சமுதாயத்தில் வாழ்பவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை (Herd immunity) உருவாக்கும் என்கிறார் Vallance.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, கொரோனாவை பரவ விடாமல் தடுப்பதற்காக அல்ல, அதற்கெதிராக பிரித்தானியாவில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்காக என்று கூறியுள்ளார் Vallance.

பொதுவாக Herd immunity என்பது, தடுப்பூசிகள் போடுவதால் உருவாக்கப்படும். ஆனால், பிரித்தானியாவில் இப்போது மேற்கொள்ளப்படவிருக்கும் முறை, அதாவது கொரோனாவுக்கு தடுப்பூசி இல்லாததால், இப்போது ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்றையே பயன்படுத்தி மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகும்.

ஆகவே, இந்த சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஏனென்றால், கொரோனா பல்லாயிரக்கணக்கானோரை தாக்கும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பார்கள், மீதமிருப்போருக்கு நோயெதிர்ப்பு சக்தி ஏற்படும் என்பதுதான் இந்த சர்ச்சைக்குரிய திட்டம்.

ஆனால், சீனாவில் ஒருமுறை கொரோனா தொற்றியவர்களுக்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால், இந்த திட்டம் அபாயமானது என்கிறார்கள் விமர்சகர்கள்.

அத்துடன், நோய்க்கிருமிகள் உயிர் பிழைப்பதற்காக வெவ்வேறு மாதிரியாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பதால், கொரோனா வைரஸும் தன்னை மாற்றிக்கொண்டு பல்லாயிரக்கணக்கானோரை வரும் ஆண்டுகளில் மீண்டும் தாக்கும் என்று கருதும் நிபுணர்களும், தடுப்பூசி கண்டுபிடிப்பதே சிறந்த வழி என்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்