101 வயது முதியவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது பெற்றோரை அழைத்த பிரித்தானிய உள்துறை அலுவலகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சுமார் 52 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்த ஒரு 101 வயது முதியவரின் அடையாளத்தை உறுதி செய்ய, அவரது பெற்றோரை அழைத்துள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

Giovanni Palmeiro, 1966ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.

பிரெக்சிட்டுக்குப்பின் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ்வதற்காக விண்ணப்பித்த Palmeiroவின் அடையாளங்களை உறுதி செய்ய, அவரது பெற்றோரை அழைத்தது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

Palmeiroவுக்கே 101 வயது என்றால், அவரது பெற்றோரை வரவழைக்கவேண்டுமானால், சொர்க்கத்துக்குதான் தகவல் கொடுக்கவேண்டும்.

அப்புறம்தான் தெரிந்தது, அவரது பிறந்த ஆண்டைக் குறிப்பிடும்போது 19 என குறிப்பிட்டிருக்க, கணினி 1919க்கு பதிலாக 2019 என எடுத்துக்கொண்டிருகிறது.

அதாவது Palmeiroவுக்கு ஒரு வயது என கணினி கருதியதால்தான் அவரது பெற்றோரை அழைத்துவரச் சொல்லியிருக்கிறது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

பின்னர், அது கணினியின் தவறு என தெரியவந்தாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது என்பார்களே, அதுபோல, இப்போது அவர் இத்தனை ஆண்டுகளாக பிரித்தானியாவில்தான் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களைக் கேட்கிறது அரசு.

1966இலிருந்து Palmeiro பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் நிலையில், இப்படி அரசு கேட்பதால் கோபமடைந்த அவரது மகன், இது என் தந்தையை அவமதிப்பதற்கென்றே செய்யப்படுவது போல் இருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் வரி செலுத்தியிருக்கிறோம், என் பெற்றோர் ஓய்வூதியம் பெற்றுவருகிறார்கள், அந்த ஆவணங்களையெல்லாம் சரி பார்க்கவேண்டியதுதானே என்கிறார் அவர்.

திருமணமாகி 75 ஆண்டுகள் ஆன Palmeiroவுக்கு, Lucia (92) என்ற மனைவியும், 8 பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்