ஈரான் மக்களிடம் நல்லவர் போல நடித்து டிரம்ப் விஷ கத்தியை பாய்ச்சி விடுவார் என ஈரான் உச்ச தலைவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் ஒரு அரிய பிரசங்கத்தை நிகழ்த்தினார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பை ஒரு கோமாளி என விமர்சித்த அவர், ஈரான் மக்களிடம் நல்லவர் போல நடித்து விஷ கத்தியை முதுகில் பாய்ச்சிவிடுவார் என எச்சரித்தார்.
பல வாரங்களாக தொடர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கொந்தளிப்பு, உயர்மட்ட இராணுவத்தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது, ஈராக்கில் உள்ள இராணுவ தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது என பல விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார்.
ஜனவரி 3 ம் திகதி ஈரான் அதன் மிக மூத்த இராணுவத் தலைவரான குவாஷிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜனவரி 8 ம் திகதி ஈராக்கில் இரண்டு அமெரிக்க தளங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்திருந்த வேளையில், 176 பயணிகளுடன் சென்ற உக்ரேனிய விமானம் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டது என ஈரான் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஈரானின் சிக்கலான ஆட்சி சர்வதேச கண்டனம் மற்றும் உள்நாட்டு விமர்சனங்களில் கடுமையாக சிக்கியது.
இதனால் தெருக்களில் ஒன்றுகூடிய ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் "கமேனிக்கு மரணம்" மற்றும் "மதகுருக்கள் தொலைந்து போங்கள்" என உச்ச தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.
அந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், நாங்கள் உங்களுடன் இருக்கிறேன் என ஈரான் மக்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய கமேனி, எதிரிகளின் முகத்தில் கரியை பூச தேசிய ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஈரானை முழங்காலுக்கு கீழே கொண்டு வரும் அளவிற்கு அவர்களுக்கு பலம் கிடையாது. பலவீனமானவர்கள் என மேற்கத்திய நாடுகளை விமர்சித்தார்.
மேலும், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை அவமதிக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் அமெரிக்காவின் கைக்கூலிகள் என கூறினார்.
கமேனி 1989 முதல் நாட்டின் உயர்மட்ட பதவியில் இருந்து வருகிறார். மேலும் அனைத்து முக்கிய முடிவுகளிலும் இறுதிக் கருத்து அவரே எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.