பிரித்தானிய கிராமத்தில் சாலையில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்: ஆறு ஆண்டு கால மர்மம் விலகியது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய குக்கிராமம் ஒன்றில் அவ்வப்போது சாலையில் பணம் கட்டுக்கட்டாக கிடப்பதும், அதை கண்டுபிடிப்பவர்கள் பொலிசாரிடம் ஒப்படைப்பதும் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், தற்போது அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளது.

கடந்த 2014 முதல் பிரித்தானியாவிலுள்ள Blackhall Colliery என்னும் கிராமத்தின் சாலைகளில், யாரோ ஒரு மர்ம நபர் கட்டுக்கட்டாக பணத்தை போட்டுச் செல்வது வழக்கம்.

இதனால் பிரித்தானியாவிலேயே இதுதான் நேர்மையான கிராமமோ என மக்கள் வியந்து நோக்கும் புகழும் இந்த கிராமத்திற்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக 20 பவுண்டு நோட்டுகள் கொண்ட கட்டுகள், மொத்தம் 2,000 பவுண்டுகள், எல்லோர் கண்ணிலும் படும் விதமாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் கொஞ்சமும் சறுக்காமல் பணத்தை தொடர்ந்து பொலிசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

Photograph: Durham Constabulary/PA

ஒரு பக்கம் யாரோ லொட்டரியில் பெருந்தொகை வென்ற ஒருவர் இப்படி செய்கிறாரா, அல்லது போதை கும்பலைச் சேர்ந்த ஒருவர் தவறான வழியில் சேர்த்த பணத்தை வீசிவிட்டு செல்கிறாரா, அல்லது யாரோ முதியவர்கள் பணத்தை தவறவிட்டார்களா என பல கேள்விகள் ஆறு ஆண்டுகளாக மக்கள் மனதில் நிலவி வந்தன.

பொலிசாரும் பணத்தை போட்டுச் சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், ஒரு தம்பதி திங்கட்கிழமையன்று பொலிசாரை சந்தித்து, தாங்கள்தான் அந்த பணத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக போட்டுவந்தது என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தாங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தங்களுக்கு உதவியதால், அந்த கிராமத்தின் மீது தங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டதாகவும், தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடித்ததால், அதை அந்த கிராமத்தினருடன் பகிர்ந்துகொள்ள விரும்பியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியது உண்மைதானா என்பதை, வீசப்பட்ட பணத்தின் எண்கள் உட்பட, தம்பதிக்கு மட்டுமே தெரிந்த சில தகவல்களை வைத்து உறுதிசெய்துகொண்ட பொலிசார், அவர்களது பெயர்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

அவர்கள் ஆசைப்பட்டதுபோலவே, அந்த கிராம மக்களை அந்த பணம் சென்று சேர்ந்துள்ளது. அதாவது, பணத்தைக் கண்டெடுத்த ஒருவர் அதை பொலிசாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட காலம் வரை அந்த பணத்தை யாரும் சொந்தம் கொண்டாடாவிட்டால், பொலிசார் அந்த பணத்தை ஒப்படைத்த நபரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

பணத்தை போட்டுவிட்டு, அதை யாராவது எடுக்கிறார்களா என்று பார்க்கும்வரை, தம்பதி மறைந்திருந்து கவனிப்பார்களாம்.

தினம் தினம் குற்றச் செயல்களையே பார்த்துக்கொண்டிருந்த எங்களால், இந்த மனம் நெகிழ வைக்கும் செயலை நீண்ட காலத்திற்கு மறக்க இயலாது என்கிறார்கள் பொலிசார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்