வணக்கம் என்று கூறி தமிழர்களுக்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய பிரதமர்: இலங்கையையும் மறக்கவில்லை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய தேர்தலையொட்டி தமிழ் சமுதாயத்திற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் அவர் பதிவேற்றம் செய்துள்ள அந்த வீடியோவில், பிரித்தானியாவில் வாழும் தமிழ் சமுதாயத்தினர் பிரித்தானியாவுக்கு ஆற்றியுள்ள பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, இலங்கையில் கடந்த காலத்தில் நடந்தவற்றிற்கு நியாயம் கிடைப்பது குறித்தும் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கும் போரிஸ் ஜான்சன், நம் நாட்டிற்கு தமிழ் சமுதாயம் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், தமிழர்களின் குணாதிசயங்களும், நமது மருத்துவத் துறைக்கும், தொழில் துறைக்கும், கல்விக்கும் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பும் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றும் போரிஸ் ஜான்சன், இலங்கையில், சமரசம், கடந்த காலத்தில் நடந்தவற்றிற்காக கணக்கொப்புவித்தல் ஆகியவை நடக்கும் என்றும், நீண்ட காலத்திற்கு அமைதி நிலவும் என்றும் தான் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி என்று மீண்டும் தமிழில் கூறி தனது உரையை நிறைவு செய்தார் போரிஸ் ஜான்சன்.

ஏற்கனவே சென்ற மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தனது கட்சி, இலங்கை, சைப்ரஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட, உலகம் முழுவதிலும் சமரசம், நிலைத்தன்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்திருந்தது.

அந்த அறிக்கை இலங்கை அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அரசியல்வாதிகள் பலரும், கொழும்புவுக்கான உயர் ஆணையரும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், திருத்தப்படவேண்டும் என்றும் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்