நாயுடன் வாக்களித்த போரிஸ் ஜான்சன்: சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்க்கும் வாக்குச்சாவடியில் நாய்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது செல்ல நாயுடன் சென்று தமது வாக்கை பதிவு செய்துள்ளார்.

ஒரு தலைமுறைக்கான பிரித்தானியாவின் மிக முக்கியமான தேர்தல் இதுவென வருணிக்கப்படும் இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 7 மணி துவங்கி இரவு 10 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பொதுமக்கள் முக்கால் மணி நேரம் வரை வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது செல்ல நாய் Dilyn உடன் சென்று காலையிலேயே வாக்களித்துள்ளார்.

ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் எவரும் அவருடன் வாக்களிக்க செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வாக்குச்சாவடியில் நாய் என்ற சொல்லாடல் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பலரும் தங்களின் செல்ல நாய்களை வாக்குச்சாவடிகளின் முன்பு கொண்டு சென்று புகைப்படம் எடுத்து பதிவேற்றி வருகின்றனர்.

வாக்களிக்க மிக நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை கிண்டலடிக்கும் வகையில் நாய்களின் புகைப்படங்களை பதிவேற்றுகின்றனரா என்ற கேள்வியும் சிலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி காலையில் நாயுடன் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள், தங்கள் நாய்களை வாக்குச்சாவடி அருகே கட்டிவிட்டு, வாக்களிக்க சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் 5 நிமிடங்களில் வாக்களித்து திரும்பியவர்கள் தற்போது கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்