மூன்று நாட்களில் 513 முறை தொலைபேசி அழைப்பு விடுத்த நபர்! நீதிமன்றத்தை நாடிய 3 பிள்ளைகளின் தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் தமது முன்னாள் மனைவியை அச்சுறுத்த நபர் ஒருவர் 12 நாட்களில் 650 முறை தொலைபேசியில் அழைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தங்கள் இருவருக்கும் பொதுவான நான்கு படுக்கையறை கொண்ட £300,000 மதிப்பிலான குடியிருப்பை விற்பனைக்கு வைத்ததே இந்த களேபரங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் குடியிருந்துவரும் தொழிலதிபர் 44 வயதான சையத் அலி. இவரே தமது முன்னாள் மனைவியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமான ரிஃபாத் ரியாஸ் என்பவரை தொடர்ந்து 12 நாட்கள் 650 முறை தொலைபேசியில் அழைத்தவர்.

ஆனால் ஒரே முறை மட்டும் ரிஃபாத் ரியாஸ் இவரது அழைப்புக்கு பதிலளித்துள்ளார். மறுமுனையில் தமது முன்னாள் கணவர் என தெரியவந்த பின்னர் ரிஃபாத் ரியாஸ் இவரது அழைப்புகளை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இரவு 11 மணிக்கு பின்னரே சையத் அலி தொலைபேசி அழைப்பு விடுத்து வந்துள்ளார். கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை 513 முறை சையத் அலி தொலைபேசியில் அழைத்துள்ளார்.

தொடர்ந்து 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் 106 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். இதில் 180 அழைப்புகள் இரவு 10 மற்றும் 11 மணிக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு 12 மணியில் இருந்து நள்ளிரவு 2.15 மணிவரை 104 முறை அழைப்பு விடுத்துள்ளார். ஒருமுறை இவரது அழைப்புக்கு பதிலளித்த நிலையில், மிகவும் மோசமாக திட்டியதாகவும்,

குடியிருப்பை விற்பனைக்கு வைப்பதில் இருந்து விலகுமாறும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொண்டு 16 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளனர்.

3 பிள்ளைகளுக்கு பெற்றோரான இவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர்.

இருவரும் இணைந்து பிரித்தானியாவில் நிறுவனங்கள் சிலவற்றை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

தொடர் தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல் உள்ளிட்டவையால் தாம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ரிஃபாத் ரியாஸ்,

நம்பிக்கையை இழந்துவிட்டேன், சித்தப்பிரமை பிடித்தது போல இருக்கிறது, இதில் இருந்து மீண்டு வர தமக்கு அதிக நாளானது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குற்றத்தை ஒப்புக்கொண்ட சையத் அலிக்கு, 10 மாத சிறை தண்டனையும், 2 ஆண்டுகள் தமது முன்னாள் மனைவி ரிஃபாத் ரியாஸை தொடர்புகொள்ள தடையும் விதித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்