இலங்கையில் பெற்றோரை பறிகொடுத்த பிரித்தானிய சகோதரர்கள்: இன்று செய்யும் நெகிழ்ச்சி செயல்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இலங்கையில் சுனாமியின்போது தங்கள் பெற்றோரை இழந்த சகோதரர்கள், அந்த இலங்கை தொடங்கி உலகம் எங்கும் சிறுவர் மையங்களுக்கு உதவுவதற்காக கடினமாக உழைத்து வருகிறார்கள்.

பிரித்தானியர்களான கெவினும் அவரது மனைவி சாண்ட்ராவும் கடின உழைப்பாளிகள். அதனால் குடும்பத்தோடு செலவிட குறைவான நேரமே அவர்களுக்கு கிடைத்தது.

எனவே, ஒரு நாள் தங்கள் குடும்பத்துக்காக நேரம் செலவிட முடிவெடுத்த தம்பதி தங்கள் பிஸினசை விற்றுவிட்டு தங்கள் ஆறு பிள்ளைகளுடன் உலக சுற்றுலாவுக்கு புறப்பட்டார்கள்.

ஆறு மாதங்கள் இந்தியாவை சுற்றிப் பார்க்க திட்டமிட்ட குடும்பம், இந்தியாவுக்கு வந்தபோது காலம் போனதே தெரியவில்லை, ஆறு மாதங்கள் நான்கு ஆண்டுகளானது.

சுற்றுலா என்று புறப்பட்டாலும் அவர்கள் ஏழை மக்களை சந்திப்பது, தன்னார்வலர்களாக பணி செய்வது, சேரிக்குழந்தைகளுடன் விளையாடுவது என காலம் மகிழ்ச்சியாக சென்றது.

கடைசியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை இலங்கையில் கொண்டாடுவது என முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களது மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. சுனாமி வந்து கெவினையும் சாண்ட்ராவையும் அள்ளிச் சென்றுவிட்டது.

ஒரு முறை ஆழிப்பேரலைக்குத் தப்பி குட்டிக் குழந்தைகளான ரோஸியையும் மேட்டையும் பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்றாலும், அடுத்து வந்த அலை இணைபிரியாத தம்பதியை சாவிலும் பிரிக்காமல் அழைத்துச் சென்றது.

மற்றொரு அறையில் இருந்த பவுலும் ராபும் நடந்ததை உணர்ந்த நேரத்தில், எல்லாமே முடிந்து போயிருந்தது.

230,000 பேருடன் அவர்களது பெற்றோரும் உயிரிழந்திருந்திருந்ததை அறிந்து அதிர்ந்து போனார்கள் பிள்ளைகள்.

பெற்றோரை இழந்து பிள்ளைகள் மட்டும் பிரித்தானியா திரும்ப, குடும்ப பொறுப்பு மூத்த பிள்ளைகளான பவுல், ராப் தோளில் விழுந்தது.

உழைப்பு இரத்தத்திலேயே இருக்க, பெற்றோரைப்போலவே பிள்ளைகளும் கடுமையாக உழைக்கத் தொடங்கினார்கள்.

பவுலுக்கு அவுஸ்திரேலியாவில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அப்படி இருக்கும் நிலையில் தனது 21ஆவது பிறந்த நாளுக்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்தார் ராப்.

அண்ணனும் தம்பியும் ஜாலியாக சுற்றிவிட்டு வீடு திரும்பும்போது அவர்களுக்கு ஒரு திட்டம் தோன்றியது.

புது பிஸினஸ் ஒன்றைத் துவங்கி அதில் வரும் வருவாயில் இருந்து ஒரு பங்கை சிறுவர்களுக்கு உதவுவதற்காக கொடுக்கவேண்டும் என்பதுதான் அது.

இந்தியா வந்திருந்தபோது மகாத்மா காந்தி பயன்படுத்தும் பொருட்கள் குறித்து சகோதரர்கள் அறிந்திருந்தார்கள்.

அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே நீடித்துழைக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களால் செய்யப்பட்டிருந்தன.

எனவே காந்தியின் பெயரிலேயே செருப்பு செய்யும் நிறுவனம் ஒன்றை துவக்கினார்கள்.

அவுஸ்திரேலிய வேலையை விட்டு விட்டு பிரித்தானியா திரும்பிய பவுல் முழு நேரமும் செருப்பு தயாரிப்பு, விற்பனையை கவனிக்க, அண்ணன் ராப் உழைத்துப்போட்டார். கடினமாக உழைத்தார்கள் சகோதரர்கள். உழைப்புக்கு பலன் கிடைத்தது.

அவர்களது நல் நோக்கம் அறிந்த பெரிய பெரிய நிறுவனங்கள் ஆதரவுக் கரம் நீட்டின. செருப்பிலிருந்து, ஆடைகள் பக்கம் கவனம் திரும்பியது, விருதுகளும் குவிந்தன.

இன்று முழு நேரமும் வெற்றிகரமாக பிஸினஸ் செய்து வரும் சகோதரர்கள் தங்கள் வருவாயில் 10 சதவிகிதத்தை உலகெங்குமுள்ள சிறுவர் மையங்களுக்கு அளித்து வருகிறார்கள்.

முதலில் எந்த இலங்கையில் பெற்றோரை இழந்தார்களோ அதே இலங்கையில் சிறுவர் மையம் ஒன்றிற்கு நிதியுதவி செய்ததோடு, தங்கள் முதல் சிறுவர் மையத்தையும் அங்கு தொடங்கினார்கள்.

இன்று உலகின் பல்வேறு நாடுகளில் சிறுவர் மையங்களை தொடங்கி நடத்தி வருவதோடு, மங்கோலியா வியாட்நாம் போன்ற நாடுகளிலுள்ள ஏதாவது தொண்டு நிறுவனங்கள் தங்கள் உதவியை நாடுவார்களா என்றும் காத்திருக்கும் சகோதரர்களின் சேவை தொடர்கிறது, வெற்றியும்...


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்