பிரித்தானியா பெண் கென்று சூட்கேசில் புதைக்கப்பட்ட வழக்கில் நியூசிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு: கண்கலங்கிய பெற்றோர்

Report Print Basu in பிரித்தானியா

நியூசிலாந்தில் பிரித்தானியா இளம்பெண் கொன்று சூட்கேசுக்குள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரை சேர்ந்த 22 வயதான கிரேஸ் மில்லேன், உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நியூசிலாந்து சென்றிருந்தார்.

பின்னர், கிரேஸ் மாயமானதாக புகார் எழுந்ததை அடுத்து அவரை தேடி வந்த பொலிசார், ஆக்லாந்து அருகே வனப்பகுதியில் சூட்கேசுக்குள் வைத்து புதைக்கப்பட்டிருந்த கிரேஸின் உடலை கண்டெடுத்தனர்.

சிசிடிவி வைத்து விசாரணை நடத்தியதில், கிரேஸ் டின்டர் என்னும் ஆப் மூலம் 27 வயதான நியூசிலாந்தைச் சேர்ந்த நபருடன் பழகியது தெரியவந்தது. குறித்த நபரை கைது செய்து பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், கிரேஸ் மில்லேன் வழக்கை மூன்று வாரங்களாக விசாரித்து வந்த ஆக்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டின்டர் ஆப் மூலம் பழகிய நியூசிலாந்தை சேர்ந்த 27 வயதான நபர், கிரேஸ் மில்லேனை கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

22 வயதான கிரேஸ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்லாந்தில் உள்ள தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பின்னர் குற்றவாளியால் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் தனிமையில் இருந்த போது எதிர்பாராத விதத்தில் கிரேஸ் இறந்ததாக குற்றவாளி கூறிய நிலையில், கிரேஸ் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளியின் அலைப்பேசியை ஆய்வு செய்ததில், கூகுளில் நியூசிலாந்தில் பிணம் தின்னும் பறவைகள் இருக்கும் இடம் மற்றும் இறந்த உடலை எப்படி அப்புறப்படுத்துவது என தேடியது நீதிமன்ற விாசரணையில் அம்பலமாகியுள்ளது.

எனினும், குற்றவாளிக்கான தண்டனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற கொல்லப்பட்ட கிரேஸின் பெற்றோர் கண்கலங்கியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்