திவாலான பிரித்தானியாவின் மாபெரும் நிறுவனத்தை பல மில்லியன் டொலருக்கு வாங்கியது சீனா

Report Print Basu in பிரித்தானியா

திவாலான பிரித்தானியாவின் மிகவும் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தை சீனா நிறுவனம் வாங்கியுள்ளது.

பிரித்தானியாவின் முக்கிய பயண நிறுவனத்தை, சீன நிறுவனமான ஃபோசுன் 11 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் வாங்கியுள்ளது.

தாமஸ் குக் செப்டம்பர் மாதம் திவாலானதால் ஆயிரக்கணக்கானோர் வேலைகள் இழந்தனர், வெவ்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் அங்காங்கே சிக்கி தவித்தனர்.

இந்நிலையில், முன்பு தாமஸ் குக் நிறுவனத்தின் பெரிய பங்குதாரராக இருந்த சீன நிறுவனமான ஃபோசுன், நிறுவனத்தை வாங்கி மீட்டுள்ளது. இப்போது தாமஸ் குக்கை இணையத்தில் மட்டும் நிறுவனமாக மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

தாமஸ் குக்கின் ஹோட்டல் பிராண்டுகளான காசா குக் மற்றும் குக்ஸ் கிளப் ஆகியவற்றுடன் பிராண்ட் பெயரையும் ஃபோசுன் கையகப்படுத்தியுள்ளது.

நிறுவனம் சரிவதற்கு முன்னர் தாமஸ் குக்கை காப்பாற்ற மறுநிதியளிப்பிற்கு ஃபோசுன் முன்வந்தது. ஆனால் தாமஸ் குக்கை மீட்க இன்னும் அதிக பணம் வேண்டும் என்று வங்கிகள் கூறியதை அடுத்து ஃபோசுன் உடனான ஒப்பந்தம் தோல்வியடைந்தது.

தாமஸ் குக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்ததால் 2,500 வேலைகள் இழந்தன. பாதிக்கப்பட்ட பயணிகளை மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதற்காக மீட்பு விமானங்களை அனுப்பி அரசாங்கம் அவசரகால நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்