290 அடி உயர புகை போக்கியின் உச்சியில் சிக்கிய முதியவர்: மீட்பு முயற்சிகள் தோல்வி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 290 அடி உயர புகை போக்கியின் உச்சியில் சிக்கி தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த முதியவரை மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

Carlisle என்ற நகரில், பருத்தி தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேறும் புகையால் மக்கள் அவதிப்பட்டதால், மக்கள் பாதிக்காத வண்ணம் புகையை வெகு உயரத்தில் வெளியேற்றுவதற்காக 290 அடி உயரமுடைய புகை போக்கி ஒன்று 2836ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த புகை போக்கி உலகிலுள்ள பெரிய எட்டு புகைப்போக்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த பகுதியில் வசிப்போருக்கு, யாரோ அலறும் சத்தம் கேட்டு வந்து பார்க்கும்போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், அந்த புகை போக்கியின் உச்சியில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக பொலிசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட, அவரை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது.

ஏராளமான மீட்புக் குழுவினர், ஹெலிகொப்டர் உதவியுடனும், தீயணைப்பு வீரர்கள், மலையேற்ற வீரர்கள் உயரமான இடங்களில் மீட்பு பணியாற்றும் நிபுணர்கள் உதவியுடனும் அவரை மீட்கும் பணியில் இறங்கினர்.

ஆனால், அவ்வளவு உயரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த அந்த முதியவரை மீட்பது மிகவும் கடினமாக இருந்தது.

14 மணி நேரத்திற்குப்பின் ராட்சத கிரேன் போன்ற கருவி ஒன்றின் உதவியுடன் அவரை அணுகிய மீட்புக்குழுவினர், வெகு நேரம் போராடி அவரை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

ஆனால் அவரை பரிசோதிக்கும்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதில் மர்மம் என்னவென்றால், அந்த 50 வயது முதியவர், எப்படி அந்த 290 அடி உயரமுடைய புகை போக்கியின் உச்சிக்கு சென்றார் என்பதுதான்.

ஏனென்றால், தரையிலிருந்து 15 அடி உயரத்திற்கு அந்த புகைபோக்கியில் ஏறுவதற்கு ஏணி எதுவும் இல்லை.

அப்படி இருக்கும்போது அவர் எப்படி அந்த புகை போக்கியில் ஏறினார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

அவர் எதற்காக மேலே ஏறினார், எப்படி தலைகீழாக சிக்கினார் என்பவை குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்