39 புலம்பெயர்ந்தோர் மரணத்தில் மேலும் இருவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

39 புலம்பெயர்ந்தோர் மரணத்தில் வட அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பிரித்தானிய பொலிசார் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்.

வட அயர்லாந்திலுள்ள Armagh நகரைச் சேர்ந்த Ronan Hughes (40) மற்றும் அவரது தம்பி Christopher (34) ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டுள்ள எசெக்ஸ் பொலிசார், 39 பேர் லொறிக்குள் சிக்கி பரிதாபமாக பலியான வழக்கு தொடர்பாக அவர்களை விசாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

Rowan என்றும் அழைக்கப்படும் Ronanக்கு, அயர்லாந்து குடியரசுடனும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை எசெக்சில் லொறி ஒன்றில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னரில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொலை மற்றும் கடத்தல் வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Essex Police

அவர்களில் லொறி சாரதியான Mo Robinson (25) என்பவருக்கு சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் நவம்பர் மாதம் 25ஆம் திகதி Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

இந்நிலையில், Ronan மற்றும் அவரது தம்பி Christopher ஆகியோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களை விரைவாக பிடிப்பதற்காக, பொலிசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்