15 வயது பள்ளி மாணவியாக இருக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போய், தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த பிரித்தானிய இளம்பெண்ணான ஷமீமா பேகத்தின் வார்த்தைகள் இவை...
என் குழந்தைகள் இறந்துவிட்டார்கள், என் நண்பர்களை இழந்துவிட்டேன், நாடு திரும்பவேண்டும் என்ற ஆசையைத்தவிர வேறெதுவும் எனக்கு இப்போது இல்லை, என்னை பிரித்தானியாவில் தண்டித்தாலும் பரவாயில்லை என்கிறார் அவர்.
இதற்கு முன்பு சில தருணங்களில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தபோது முகம் காட்டிய ஷமீமா இம்முறை தனது புகைப்படத்தை வெளியிட விரும்பவில்லை.
சமீபத்தில் பிரபல பிரித்தானிய பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டியளித்துள்ள ஷமீமாதான் இவ்வாறு கூறியுள்ளார்.
வீட்டிலிருந்து ஓடி ஐ.எஸ் அமைப்பில் இணைந்தபோது அவருடைய பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது.
அதைக்கேட்ட பிரித்தானியர்கள் கொதித்தார்கள். அந்த பேட்டியிலிருந்து, அவர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததற்காக கொஞ்சமும் வருத்தப்படவில்லை என்பது தெளிவாக புரிந்தது.
ஐ.எஸ் வெல்லவேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்திருந்த ஷமீமாவின் சில வார்த்தைகளை இன்றும் மறந்திருக்கமாட்டார்கள் பிரித்தானியர்கள்.

‘முதன் முறையாக வெட்டப்பட்ட ஒரு தலையைப் பார்த்தபோது, அது எனக்கு எவ்வித வருத்தத்தையும் அளிக்கவில்லை’ என்று கூறியிருந்தார் அவர்.
ஐ.எஸ் அமைப்பின் கடுமையான உடை கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்யும் ஒருவராக ஷமீமா பணிபுரிந்ததாக கருதப்படுகிறது.
அவர் எப்போதும் ஒரு AK-47 துப்பாக்கியை கையில் வைத்திருந்ததாகவும், இளம்பெண்களை ஐ.எஸ் அமைப்பில் இணைக்கும் வேலையை பார்த்ததாகவும், மனித வெடிகுண்டாக செயல்படுபவர்கள், குண்டு வெடிக்கும் முன் குண்டுகளிலிருந்து தப்பக்கூடாது என்பதற்காக, வெடிகுண்டுகள் இணைக்கப்பட்ட மேலாடைகளை அவர்கள் உடலுடன் இணைத்து தைக்க அவர் உதவியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இம்முறை கண்ட ஷமீமா வேறு மாதிரி இருந்தார்.சோபா ஒன்றில் அமர்ந்திருந்த ஷமீமா, இப்போது முகத்திரை அணிந்திருக்கவில்லை, சமீபத்தில் மூக்கு குத்தி, மூக்குத்தி ஒன்றை அணிந்துகொண்டிருந்தார் அவர்.
உதட்டில் lip gloss அணிந்து, பளிச்சென்ற உடை அணிந்து, அதாவது கருப்பு உடை அணியாமல் இருந்தாலும், அந்த முகம் பளிச்சென சொல்லியது, அது பிரித்தானியாவிலிருந்து 15 வயதில் ஓடிப்போன அதே ஷமீமா பேகம்தான்.
என் உடல் நலம் நன்றாக இருக்கிறது, ஆனால், எனது மன நலம் அவ்வளவு நன்றாக இல்லை என்று கூறும் ஷமீமா, எனது குழந்தைகள் எல்லோரையும் இழந்துவிட்டேன், எனது கவலையை மேற்கொள்ள எனக்கு மன நல சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறார்.
Roj என்னுமிடத்திலிருக்கும் முகாமிற்கு மாற்றப்பட்டு சில நாட்களில் அவரது மகன் இறந்துவிட்டிருக்கிறான்.
சென்ற வாரம் இணையத்தில், ஷமீமா பிரித்தானியாவுக்கு திரும்பிவிட்டதாகவும், வேறு பெயருடன் வாழும் அவர், முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேரின் மனைவியாகிய Cherie Blairஆல் உதவி பெற்றிருப்பதாகவும் வதந்திகள் பரவி 50,000 முறைக்கும் மேலாக பகிரப்பட்டன.
ஆனால் அது உண்மையல்ல என்பதை இப்போதைய பேட்டி நிரூபித்துள்ளது. Dailymail என்ற பிரித்தானிய பத்திரிகையின் நிருபர் ஒருவர், ஷமீமாவை Roj முகாமில் சென்று சந்தித்துள்ளார்.
அப்போது பேசும்போதுதான் ஷமீமா தான் ஐ.எஸ் அமைப்பை வெறுப்பதாகவும், தன்னையும் தன் மகனையும் முன்பு இருந்த முகாமிலிருப்போர் கொன்று விடுவார்கள் என்று பயந்து, தங்களை காப்பற்றிக்கொள்வதற்காகத்தான் முன்பு ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக பேசியதாகவும் கூறியுள்ளார் ஷமீமா.
நான் செய்த ஒரே தவறு சிரியாவுக்கு வந்ததுதான் என்று கூறும் ஷமீமா, இதை விட பிரித்தானிய சிறைகளில் அதிக பாதுகாப்பு இருக்கும் என்றும், தான் பிரித்தானியாவுக்கு வர விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்.
என்னை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள், என்னை விசாரியுங்கள், ஏற்கனவே இந்த முகாமில் நான் தண்டனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார் அவர்.