முதன்முறையாக ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட பிரித்தானியர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நூறு ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் கூடியிருந்த மக்கள் மீது பிரித்தானிய அதிகாரி ஒருவர் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதையடுத்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இந்தியாவில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தின் தீ பற்றியெரிந்த காலகட்டம் அது.

அந்த தீ பரவாமல் தடுக்க, மக்கள் நெஞ்சில் பயத்தை ஏற்படுத்த அவ்வப்போது பிரித்தானிய அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் Brigadier-General Reginald Dyer.

குறுகலான வழியுடன் கூடிய ஒரு மைதானத்தில் மக்கள் கூடியிருக்க, தலைவர்கள் உணர்ச்சி பொங்க சுதந்திரப் போராட்ட உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்தார் General Dyer.

மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவர் உத்தரவிட, அவரது தலைமையின் கீழ் பணியாற்றிய வீரர்கள் அங்கு குழுமியிருந்தோர் மீது எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 300 முதல் 1,600 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் ஆயிரத்துக்கும் மேலானோர் படுகாயமடைந்தார்கள்.

இது நடந்து இந்த ஆண்டுடன் 100 ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும், இதுவரை எந்த பிரித்தானியரும் இந்த அராஜக செயல்களுக்கு மனிப்புக் கோரியதில்லை. சமீபத்தில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரஸா மே கூட நடந்ததற்காக வருத்தம் தெரிவித்தாரேயொழிய, மன்னிப்புக் கேட்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள Archbishop of Canterbury, Most Rev Justin Welby ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், 100 ஆண்டுகளுக்குமுன் பிரித்தானிய தலைமையின் கீழிருந்த படைகள் நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்து, நடத்திய பயங்கரமான அராஜகச் செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் அவர்.

பின்னர் நாடு திரும்பியபின்னரும் பிரித்தானியா சார்பில் தாம் மன்னிப்புக் கேட்பதாக சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக தெரிவித்துக் கொண்டார் அவர்.

பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட ஒரு செய்தியில், இன்று, ஏராளமான சீக்கியர்களும், இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பிரித்தானிய படைகளால் 19191ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த இடத்துக்கு சென்ற எனக்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்