பாட்டியை பார்க்க சென்ற பிரித்தானிய குடிமகள்: உளவு பார்த்ததாக ஈரானில் சிறைத்தண்டனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்று, பத்து ஆண்டுகள் லண்டனில் வசித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது பாட்டியை சந்திப்பதற்காக ஈரானுக்கு சென்றபோது ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் தனது பாட்டியை சந்திப்பதற்காக சென்ற Aras Amiri (34), ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உளவு பார்ப்பதற்காக ஈரானுக்கு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள, பிரித்தானிய கவுன்சில் ஊழியராக பணிபுரிந்து வரும் Amiriக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, தொடர்ந்து மேல் முறையீடு செய்து வந்தார் Amiri.

இந்நிலையில் அவரது மேல் முறையீட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரது சிறைத்தண்டனையை ஈரானிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆனால், ஈரான் உளவுத்துறை, தன்னை ஈரானுக்காக பிரித்தானியாவில் உளவு பார்க்கும்படி கோரியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததாலேயே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Amiri தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ள பிரித்தானிய, ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட Nazanin Zaghari-Ratcliffeஇன் கணவர், பிரித்தானியா தனது குடிமக்களை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானிய, ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட மக்களை ஈரானுக்கு செல்வதற்கு எதிராக எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஈரான் நாட்டின் தலைவரான Ayatollah Ali Khamenei, நாட்டில் மேற்கத்திய ஏஜண்டுகளின் ஊடுருவல் இருந்து வருவதாக கூறியதையடுத்து, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ந்து ஈரானியர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்