இங்கிலாந்தில் நடைபெற்ற கார் கண்காட்சியின் போது இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஸ்டீவனேஜில் வாரம்தோறும் கார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல வாகன ஒட்டிகளும் கலந்துகொண்டு தங்களுடைய கார்களை ஒட்டி காண்பித்து மக்களை மகிழ்விக்கின்றனர்.
ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 9.45 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மக்கள் கூட்டத்திற்குள் சீறி பாய்ந்துள்ளது. இதில் 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.