பிரித்தானியர்கள் இந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்... வெளியான முக்கிய தகவலின் பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

துனிசியாவில் மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் ஒரு வார காலத்தில் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று தற்கொலை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதில், பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 அப்பாவி மக்களும் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு முன்னெடுத்த சூஸ் கடற்கரை படுகொலை மற்றும் பார்டோ அருங்காட்சியகம் தாக்குதல்களில் இருந்து பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீண்டுவரும் நிலையிலேயே தற்போது மீண்டும் மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தாக்குதல்களிலும் சுமார் 60 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது.

துனிசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக புழங்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் கடுமையான தாக்குதலை முன்னெடுக்கலாம் என தற்போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகள், போக்குவரத்து மற்றும் வெளிநாட்டவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளை தீவிரவாதிகள் குறிவைக்கலாம் என எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இரண்டு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

முதல் தாக்குதலானது பிரான்ஸ் தூதரகத்தின் அருகாமையில், பொலிஸ் வாகனம் மீது முன்னெடுக்கப்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன், அப்பாவி பொதுமக்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

இதே வேளையில் துனிசிய அரசின் பயங்கரவாத தடுப்பு முகமையின் தலைமை அலுவலகம் முன்பு இன்னொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இதில் 4 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். செவ்வாயன்று பொலிசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில், பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபரை கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்