சிரியாவில் உயிரிழந்த ஷமீமாவின் குழந்தை! குவியும் கண்டனங்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
523Shares

சிரியாவுக்கு தப்பியோடி தீவிரவாதியை மணந்த பிரித்தானிய மாணவியான ஷமீமா பேகத்தின் குழந்தை உயிரிழந்துள்ளதையடுத்து, அவரது பிரித்தானிய குடியுரிமையை பறித்த உள்துறைச் செயலர் மீது கண்டனங்கள் குவிகின்றன.

சுவாசக் கோளாறு காரணமாக இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜரா என்னும் பெயருடைய ஷமீமாவின் மகன் நேற்று இரவு உயிரிழந்ததை சிரிய குடியரசு படைகள் உறுதி செய்துள்ளன.

பிப்ரவரி மாதம் அகதிகள் முகாம் ஒன்றில் பிறந்த ஜரா, சில வாரங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக தெரிகிறது.

ஏற்கனவே இரண்டு குழந்தைகளை இழந்த ஷமீமா, தனது மகனை தனியாக பிரித்தானியாவுக்குள் விடமாட்டேன் என்று கூறியிருந்ததோடு, தன்னை அனுமதிக்குமாறும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஷமீமாவின் பிரித்தானிய குடியுரிமையை பறிக்கும் உள்துறை செயலர் சஜித் ஜாவித்தின் முடிவு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஷமீமாவின் குழந்தை இறந்ததையடுத்து நிழல் உள்துறை செயலரான Diane Abbott, ஜாவித்தின் முடிவு இரக்கமற்றதும் மனிதத்தன்மையற்றதும் என வர்ணித்துள்ளார்.

ஒருவரை நாடற்றவராக்குவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள அவர், ஒரு பிரித்தானிய பெண்ணின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் இப்போது ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் உயிர் பிரிந்திருக்கிறது என்றார்.

அதேபோல், குழந்தைகளுக்கான பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர்களில் ஒருவரான Kirsty McNeill, ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய எல்லா குழந்தைகளுமே போரால் பாதிக்கப்பட்டவர்கள்போல்தான் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு குழந்தையின் மரணமுமே ஏற்றுக்கொள்ள முடியாத துயரம்தான் என்று கூறியுள்ள அவர், பிரித்தானியாவும் மற்ற நாடுகளும் வடகிழக்கு சிரியாவில் இருக்கும் தங்கள் குடிமக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஷமீமா, 15 வயதாக இருக்கும்போது, அவரும் இன்னும் இரண்டு பள்ளி மாணவிகளும் ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கடந்த மாதம் வட சிரியாவிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணியாக தலைகாட்டி பிரித்தானியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த ஷமீமா, சிரியாவில் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் தலைகளை வெட்டிக் கொன்றது தனக்கு தவறாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்