பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை செல்போனில் அழைத்து பாராட்டிய பிரித்தானிய பிரதமர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றத்தை குறைத்த இம்ரான் கானின் செயலை வரவேற்பதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே செல்போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.

கடந்த 14-ம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை வீரர்கள் எல்லையில் இருந்த பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களின் மீது தாக்குதல் நடத்தினர்.

அடுத்த மறுநாளே பாகிஸ்தானை சேர்ந்த போர் விமானங்கள் இந்திய எல்லையில் புகுந்தன. அதனை விரட்டி சென்றபோது இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்மாமன் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக்கொண்டார்.

இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இந்த போர் பதற்றத்தை இருநாடுகளும் குறைக்க வலியுறுத்தி உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்தனர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 70 மணி நேர சிறைவாசத்திற்கு பிறகு விமானி அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க அனுமதி கொடுத்தார். இம்ரான் கானின் இந்த செயல் அனைத்து நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் செல்போனில் பேசியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள டவுனிங் தெரு செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தியாவுடன் நிலவி வந்த பதற்றத்தை குறைக்கும் விதத்தில் இந்திய விமானியை திருப்பி அனுப்பி இம்ரான் கான் செய்த கடமையை வரவேற்கிறேன் என தெரசா மே கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமரை தெரசா மே வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்