Brexitஆல் உலகெங்கிலுமுள்ள பிரித்தானியர்கள் எப்படி பாதிக்கப்படப்போகிறார்கள்?: ஆஸ்திரியா

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்சிட் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற, படாத பாடுபட்டு வரும் நிலையில், ஒப்பந்தங்கள் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அது வெவ்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வாழும் பிரித்தானியர்களை எவ்விதம் பாதிக்கும் என்பதைப் பார்க்கலாம்...

ஆஸ்திரியா

மார்ச் மாதம் 29ஆம் திகதி ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாமலே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில், பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் போலவே ஆஸ்திரியாவும் தனது நாட்டில் வாழும் பிரித்தானியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.

பிரித்தானியா வெளியேறியதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஆஸ்திரியாவில் வாழும் பிரித்தானியர்கள் தகுந்த வாழிட உரிமங்களைப் பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பிக்கும் அந்த காலகட்டத்தில், அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை ஆஸ்திரியாவிலேயே தங்கியிருக்கலாம்.

இது தொடர்பில் ஆஸ்திரிய அரசு இரண்டு ஆஃபர்களை முன்வைக்கிறது, அவை கிட்டத்தட்ட வெளியேறும் ஒப்பந்தத்தையே (Withdrawal Agreement ) குறிப்பிட்ட அளவில் பிரதிபலிக்கின்றன.

அவை, பிரித்தானியர்கள் ஆஸ்திரியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறார்களா அல்லது குறைவாக வாழ்ந்திருக்கிறார்களா என்பதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆஸ்திரியாவில் வாழ்ந்த பிரித்தானியர்கள் 'Rot-Weiß-Rot – Karte plus' என்னும் வாழிட உரிமத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

அந்த விண்ணப்பம், விண்ணப்பித்தவர் பொது நலனுக்கும் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கக்கூடியவரா என்பதை உற்று நோக்கும்.

தங்கள் முதல் வாழிட உரிமத்திற்கு விண்ணப்பிப்போர் தங்கள் ஜேர்மன் மொழித் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

அதுமட்டுமின்றி தாங்கள் எந்த வகையான வாழிட உரிமத்திற்கு தகுதியுடையவர்களோ, அதற்கு பிரித்தானியர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரித்தானியர்களும் மூன்றாவது நாடுகளைச் சேர்ந்த அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சட்டப்பூர்வமாக ஆஸ்திரியாவில் ஐந்தாண்டுகளுக்கு மேல் வாழும் பட்சத்தில் அவர்கள் நிரந்தர வாழிட உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் ஆஸ்திரியாவில் ஐந்தாண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் அவர்கள், Settlement and Residence Act என்னும் சட்டத்தின் கீழ் வாழிட உரிமம் பெறுவதற்கான பொதுவான நிபந்தனைகளை சந்திப்பதற்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.

இவற்றில் குடியிருக்கும் இடம் குறித்த ஆதாரம், மருத்துவக் காப்பீடு, போதுமான வருவாய் மற்றும் பொது வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தாதவர் என்பதற்கான ஆதாரங்கள் அடங்கும்.

ஐரோப்பாவுக்கான ஒருங்கிணைப்பு, வெளி விவகாரங்கள் துறைக்கான ஃபெடரல் அமைச்சர் வழங்கிய சான்றிதழின் அடிப்படையில், விண்ணப்பதாரர் ஜேர்மன் மொழித்திறமைக்கான ஆதாரங்களை அளிக்க வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய ஆறு மாதங்களுக்குள் பிரித்தானிய பிரஜைகள் வாழிட உரிமைக்கு விண்ணப்பித்தாக வேண்டும், அதே நேரத்தில் அவரது விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கப்படும் வரை அவர் சட்டப்படி ஆஸ்திரியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்.

ஒரு பிரித்தானியர் விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டார் மற்றும் அவர் சட்டப்படி வாழ்பவராக தொடர்கிறார் என்பதை உறுதி செய்யும் ஆதாரம் கோரிக்கையின் பேரில் வழங்கப்படும்.

தற்போது ஆஸ்திரியாவில் 10,000க்கும் அதிகமான பிரித்தானியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers