பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் நாடு கடத்தும் உத்தரவு! மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா முடிவு

Report Print Kabilan in பிரித்தானியா

தன்னை நாடு கடத்த பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்றுவிட்டு, திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவுக்கு தப்பியோடினார். அதனைத் தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்ட மல்லையா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும், அவர் மீதான வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 10 திகதி மல்லையாவை நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

AP

ஆனால், நாடு கடத்தும் விடயத்தில் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு இந்த தீர்ப்பு குறித்து அனுப்பப்பட வேண்டும். அதன் பின்னர் அவர் ஒப்பதலின் பேரில் தான் நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்ற நிலையில், கடந்த 3ஆம் திகதி மல்லையாவை நாடு கடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விஜய் மல்லையா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து வரும் 14ஆம் திகதிக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். உள்துறை அமைச்சகம் உத்தரவைப் பார்த்தபின் மேல்முறையீடு செய்ய இருந்தேன். இப்போது மேல்முறையீடு செய்ய முடிவு செய்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers