படுக்கையறையில் பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்கள் என்று அசதியாக இருக்காதீர்கள்: பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கடந்த ஆண்டில் மட்டுமே சிறுவர் சிறுமியரின் நிர்வாண மற்றும் ஆபாச படங்களையும் பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகளையும் காட்டும் 100,000 இணையப்பக்கங்களை அகற்றி உள்ளதாகத் தெரிவிக்கும் பிரித்தானியாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு ஒன்று, அவற்றில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆபாச படங்களும் வீடியோக்களும் இருந்ததாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக இன்னொரு அதிர்ச்சி செய்தியையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. சிறுவர் சிறுமிகளின் ஆபாச படங்கள் நீக்கப்பட்டதையடுத்து, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து சம்பாதிக்கும் ஏமாற்றுக்காரர்களும், பார்த்து ரசிக்கும் வக்கிர புத்திக்காரர்களும் தற்போது, 11 முதல் 13 வயது வரையிலுள்ள நடுத்தரகுடும்பங்களைச் சேர்ந்த இளம்பெண்களை குறிவைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

சிறுவர் ஆபாச படங்களை விரும்பும் மனப்போக்கு கொண்ட இந்த ஏமாற்றுக்காரர்கள் இப்போது இளம்பெண்களை குறிவைத்து, மிகவும் ஆபாசமான போஸ்களைக் கொண்ட செல்பிக்களை பதிவேற்றம் செய்யுமாறு தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ள அந்த கண்காணிப்பு அமைப்பு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அகற்றப்பட்ட அந்த படங்களில், நான்கில் ஒன்று விருப்பப்பட்டு, இளம்பெண்கள் தாங்களாகவே எடுத்து பதிவேற்றிய ஆபாச படங்கள் என்கிறது.

இத்தகைய ஆபாச, நிர்வாண வீடியோக்களில் பெரும்பாலானவை தங்கள் படுக்கையறையில் தனியாக இருக்கும் இளம்பெண்கள், தங்கள் ஸ்மார்ட் போன்கள் அல்லது லாப் டாப்களில் உள்ள வெப் கேம் மூலம் எடுக்கப்பட்டவையாகும்.

அப்படிப்பட்ட பல வீடியோக்களின் பின்னணியில், பொம்மைகளும், பெற்றோர்கள் பிள்ளைகளை சாப்பிட அழைக்கும் குரல்களும் பதிவாகியுள்ளதைப் பார்க்கும்போது, பிள்ளைகள், தாங்களே எல்லை மீறியிருப்பது புரிகிறது. IWF charity என்னும் இணைய கண்காணிப்பு தொண்டு நிறுவனத்தின் தலைவரான Susie Hargreaves, பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்கள் படுக்கையறைகளில் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக்கொண்டு நிம்மதியாக இருப்பது தவறு என எச்சரிக்கிறார்.

இது நடுத்தர வர்க்கத்தினருக்கேயான பிரச்சினை என்று கூறும் Susie, நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் பலர் கையில் இன்று லாப் டாப் இருக்கிறது என்கிறார்.

ஆனால் ஏழைக் குழந்தைகள் கையில் அது இல்லை என்று கூறும் Susie, பிள்ளைகள் தங்கள் படுக்கையறையில் என்ன செய்கிறார்கள் என்பது பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.

அது எங்கள் பிள்ளைகளுக்கு நடக்காது என்றோ, ஒரேயடியாக பிள்ளைகளை கட்டுபடுத்தக்கூடாது என்றோ பெற்றோர்கள் எண்ணுகிறார்கள் என்று கூறும் Susie, மக்கள் தங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால், இணையம் என்பது மிகவும் பயங்கரமான, மோசமான, அச்சுறுத்தக்கூடிய ஆபத்தான இடமாகும் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...