தேனிலவின்போது இலங்கையில் சுனாமியிடம் குழந்தையை பறிகொடுத்த பிரித்தானிய பெண்: இப்போது செய்யும் நெகிழ்ச்சி செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் தேனிலவைக் கொண்டாடுவதற்காக இலங்கைக்கு சென்றிருந்தபோது அவர் கையிலிருந்த குழந்தையை பறித்துச் சென்றது சுனாமியின் கோரக்கரங்கள்.

14 ஆண்டுகள் மனதில் மறைத்து வைத்திருந்த அந்த வேதனையை மீண்டும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது, இந்தோனேஷியாவை இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தாக்கிய சுனாமி என்கிறார் அந்தப் பெண்.

Kim Peatfield தனது கணவர் Tristan மற்றும் தனது ஒரே மகள் Isabellaவுடன் தேனிலவைக் கொண்டாடுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தார்.

குடும்பமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை குதூகலமாக கொண்டாடி முடித்த குடும்பத்தினர், மறு நாள் காலை, காலை உணவுக்காக தயாராகிக் கொண்டிருக்கும்போது, கடலிலிருந்து பிரமாண்ட அலைகள் தாங்கள் தங்கியிருக்கும் பக்களாவை நோக்கி வருவதைக் கண்டு உடனடியாக கதவை மூடினர்.

ஆனாலும் பயனில்லை, கடல் வெள்ளம் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. மீண்டும் அலைகள் கடலை நோக்கி திரும்பிச் செல்வதை கவனித்த Tristan, வீட்டுக்குள் வந்த தண்ணீர் வெளியேறுவதற்காக கதவைத் திறந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென வந்த ஒரு பேரலை, Kimஇன் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த Isabellaவை இழுத்துச் சென்றது.

கண்முன்னே குழந்தையை கடல் இழுத்துச் செல்வதை ஒன்றும் செய்ய இயலாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த பெற்றோர்.

நீண்ட நேர கண்ணீருக்கும் கதறலுக்கும் பின், ஒருவாறாக மனதை தேற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போதுதான் தாய், தந்தை, வீடு என அனைத்தையும் இழந்த சில குழந்தைகளைக் கண்டனர் அந்த தம்பதியினர்.

தாங்களாவது ஒரு குழந்தையை மட்டும்தான் இழந்தோம், இங்கே பலர் அனைத்தையும் இழந்து விட்டார்கள் என்பதை உணர்ந்த அவர்கள், ஆதரவற்று நின்ற சில குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

பிரித்தானியாவின் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தங்கள் மகள் பெயரில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை அமைத்துள்ள Kim, இன்று 93 குழந்தைகளை பாதுகாத்து வருகிறார்.

பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதோடு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் ஆதரவளிக்கிறது Isabella ஆதரவற்றோர் இல்லம்.


You May Like This

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்