விமான நிலையத்தில் ட்ரோன்கள்: குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் பிரித்தானிய பொலிஸ்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் Gatwick விமான நிலையத்தின் அருகில் ட்ரோன்களை பறக்க விட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் பிரித்தானிய பொலிசார் திணறி வருவதோடு, தவறான நபர்களை கைது செய்ததற்காக அவமானத்தையும் சந்தித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணம் மேற்கொள்ள இருந்த 350,000க்கும் அதிகமான பயணிகளை வருத்தத்துக்குள்ளாக்கி, பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையத்திலிருந்து 760 விமானங்கள் பறக்காமல் முடங்க காரணமாக இருந்த குற்றவாளிகளின் அருகில் கூட இன்னும் பிரித்தானிய பொலிசார் நெருங்கவில்லை.

ட்ரோன்கள் பயணிகள் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் என்ற அச்சத்தில் இருமுறை விமான நிலையம் மூடப்பட்டதோடு, ராணுவம் குவிக்கப்பட்டு விமான நிலையத்திற்கருகில் பறக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் கடந்த வாரம் விமான நிலையத்திற்கருகில் உள்ள ஒரு வயலில் இருந்து, உடைந்த நிலையில் கிடந்த ஒரு ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அது மொத்த குழப்பத்திற்கும் காரணமான ட்ரோனாக இருக்கும் என கருதப்பட்டது.

ஆனால் அந்த ட்ரோனில் இருந்த கைரேகைகள் பொலிசாரின் டேட்டா பேஸிலிருந்த குற்றவாளிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எந்த கைரேகைகளுடனும் பொருந்தவில்லை.

குற்றம் தொடர்பாக ஏதேனும் துப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பொலிசாருக்கு இது பெரிய அடியாக இருந்தது.

இதற்கிடையில் திருமணமான ஒரு தம்பதியினரை தவறாக கைது செய்து 36 மணி நேரம் காவலில் வைத்ததற்காக பொலிசார் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட Gait என்பவர், தனது வீட்டின் அருகே ட்ரோன்களை பறக்க விடும் பழக்கம் உடையவர்.

அவர் தனது மனைவியுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது அலுவலக மேலாளர் சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அலுவலகத்தில் இருந்ததை உறுதி செய்தார். கைது செய்யப்பட்டதால், தங்கள் பிரைவஸி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் அந்த தம்பதியினர்.

இந்நிலையில் போக்குவரத்து துறைச் செயலரான Chris Grayling, பொலிசார் சரியான முறையில் தங்கள் பொறுப்புகளை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினரான John Woodcock, மன்னிப்புக் கேட்க வேண்டிய ஒரு சூழலை உருவாக்கிய இந்த மொத்த சம்பவங்களும், இதுபோன்ற நிகழ்வுகளைக் கையாள ஒரு நல்ல வித்தியாசமான செயல்முறை வேண்டும் என்பதையே காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

நாடு குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறது, இந்த வழக்கை விசாரிக்க வேறு வித பொலிசார் தேவை போலும் என்றும் அவர் கூறியுள்ளது, பிரித்தானிய பொலிசாரை தலை குனிவுக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...