இங்கிலாந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்திய ட்ரோன்: யார் அந்த மர்மநபர்? காவல்துறையின் அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இங்கிலாந்தின் கேட்விக் விமான நிலைய ஓடுதளத்துக்கு மிக அருகில் குட்டி ட்ரோனை பறக்கவிட்டது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி இரவு 9 மணியளவில், விமான ஓடுதளத்துக்கு மிக அருகில், ஒரு ட்ரோன் பறந்திருக்கிறது. தொடர்ந்து, சிறிது நேரம் விட்டு விட்டு தொடர்ந்து அந்த ட்ரோன் பறக்க ஆரம்பித்தது. சில மணி நேரம் இந்த ட்ரோனின் விளையாட்டு தொடர்ந்ததால், விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

சற்று நேரம் ட்ரோன் தென்படாமல் இருந்ததால் விமானங்களை இயக்க முற்பட்டனர், கேட்விக் விமான நிலைய அதிகாரிகள். அந்தச் சமயத்தில், மீண்டும் ட்ரோன்கள் தென்படத்துவங்க... ஒரே நாளில் இரண்டாவது முறையாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சுமார், 700 விமானங்களின் போக்குவரத்தை இந்த குட்டி ட்ரோன் நிறுத்தியுள்ளது.

தீவிரவாதிகளின் செயலா? அல்ல குறும்புத்தனமாக யாரேனும் செய்கிறார்களா? என காவல்துறை விசாரித்து வந்த நிலையில், சந்தேகத்தின் முறையில் இரண்டு பேரை கைது செய்தனர். ஆனால், அவர்கள் மீது எந்த தவறும் இல்லை, அவர்கள் இப்படி ஒரு தவறை செய்யவில்லை என உறவினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

நாட்டில் ட்ரோன் பயன்பாடு ஒழுங்குபடுத்தப்படாதமைக்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம்' என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ட்ரோனை வைத்து விளையாடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும் நபர்களுக்கு 50,000 பவுண்டுகள் தருவதாக இங்கிலாந்து காவல்துறை றிவித்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என முக்கியமான பண்டிகைகள் நெருங்கும் சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால், மிகுந்த அச்சத்தில் இங்கிலாந்து மக்கள் இருக்கிறார்கள்.

ட்ரோனைப் பறக்கவிட்ட மர்ம நபரைக் கண்டுபிடித்து விசாரணை செய்ய வேண்டும். அதோடு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்பதுதான் இங்கிலாந்து மக்களின் தற்போதைய வேண்டுகோள்.

மர்மமாக இப்படிப் பறக்கும் ட்ரோன்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய தொழில்நுட்பமும் காவல் துறையிடம் இருக்கிறது. ஆனால், அப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், அதைப் பறக்கவிட்ட விஷமி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.

அதனால்,அந்த முயற்சியையும் காவல் துறை எடுக்கவில்லை. பறக்கவிட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...