படகு போக்குவரத்து ரத்து, ரயில் சேவை பாதிப்பு: டயானா புயல் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

டயானா புயல் காரணமாக பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதோடு சுற்றுலாத்தலங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுத்துள்ளதோடு, காற்றில் பறக்கும் பொருட்களால் ஆபத்து ஏற்படலாம் என்றும், மின் தடை ஏற்படலாம் என்றும் கடற்கரைகளில் பேரலைகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. Pembrokeshire, Ceredigion மற்றும் Holyhead ஆகிய பகுதிகளுக்கு பெருவெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Haverfordwest பகுதியில் 29 வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கால்லம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து ரயில் சேவை முற்றிலுமாக மீளாத நிலையில், இன்னும் பாதிப்புகள் இருக்கலாம் என ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Fishguardக்கும் Rosslareக்கும் இடையில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது, Holyheadக்கும் Dublinக்கும் இடையிலான படகு சேவையில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

புதனன்று மேற்கு கரைப்பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதோடு, வியாழனன்று மத்திய மேற்கு மற்றும் வடக்கு வேல்ஸ் பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடற்கரை பகுதிகளில் பெரிய அலைகள் எழும்புவதன் காரணமாக உயிர்ச் சேதம் ஏற்படுவதற்கும் சிறிது வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு சென்று ஆபத்தை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers