விமானத்தில் அந்த நபருடன் பயணம்: 10 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு கேட்ட பிரித்தானியர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
351Shares

விமானத்தில் தமது அருகில் பயணம் செய்த உடல் பருமனான நபரால் மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறி பிரித்தானியர் ஒருவர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாங்காக் நகரில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார் வேல்ஸ் பகுதியை சேர்ந்த Stephen Huw Prosser என்ற பொறியாளர்.

இவரது அருகாமையில் உடல் பருமனான நபர் ஒருவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

நீண்ட 12 மணி நேர பயணம் என்பதால் தம்மால் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முடியாமல் போனது எனவும், அவரை வேறு இருக்கைக்கு மாற்றுங்கள் அல்லது, தமது வேறு இருக்கை வழங்குங்கள் என விமான ஊழியர்களிடம் ஸ்டீபன் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் இவரது கோரிக்கைகளை விமான ஊழியர்கள் மறுத்துள்ளதாகவும், விமானத்தில் வேறு இருக்கைகள் காலியாக இல்லை என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் 12 மணி நேரம் தாம் மிகவும் துன்பப்பட்டதாகவும், அவரது உடல் பருமனால் காயப்பட்டதாகவும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தமது முதுகுத்தண்டில் பிடிப்பு ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒருவார காலம் தாம் பணிக்கு செல்ல முடியாமல் போனது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் Pontypridd கவுண்டி நீதிமன்றத்தை அணுகிய ஸ்டீபன், தமக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி 10 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு தர பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அதே விமானத்தில் பயணம் செய்த வாடிக்கையாளர் சேவைகளுக்கான விமான மேலாளர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், விமானத்தில் இருந்து இறங்கிய பின்னரும் ஸ்டீபன் எந்த பிரச்னையும் இன்றி நடந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்