பிரித்தானியாவுக்கு புயல் எச்சரிக்கை: ஹெலீனைத் தொடர்ந்து நெருங்கி வரும் அலி புயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஹெலீன் என்னும் புயல் ஏற்கனவே பிரித்தானியாவை துவம்சம் செய்த நிலையில் அடுத்து உயிருக்கு சேதம் விளைவிக்கக்கூடிய அலி என்னும் புயல் நெருங்கி வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 80 மைல் வேகத்தில் வீச இருக்கும் கொலைகாரக் காற்றுகளால் மரங்கள் பிடுங்கி எறியப்படும், மின்சாரம் தடைபடும், குப்பை கூளங்கள், மரக்கிளைகள், காற்றினால் உடைந்த பொருட்கள் தூக்கி வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெலீன் தாக்கியதைவிட இன்னும் மோசமாக தாக்கவிருக்கும் அடுத்த புயல் நெருங்கி வருவதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அட்லாண்டிக் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்க உள்ளது, அதற்கு அலி புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

சூறாவளிக் காற்றுகள் வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பிரித்தானியாவை சரமாரியாகத் தாக்க இருப்பதால் காற்றில் அடித்து வரப்படும் பொருட்களால் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவின் தென்மேற்கு, மத்திய, வடக்கு பகுதிகள் மற்றும் கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு ஹெலீன் புயலின் வரவையொட்டி வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஸ்காட்லாந்தின் சில பகுதிகள் மற்றும் இங்கிலாந்தின் வடக்கிலுள்ள சில பகுதிகள் ஆகியவற்றிற்கு அலி புயலின் வருகையையொட்டி மஞ்சள் மற்றும் ஆம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மரங்கள் காற்றில் பிடுங்கி எறியப்படுதல், நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, மின்தடை போன்றவை அன்றாட வாழ்வை முடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் முழுவதுமே பிரித்தானியாவின் பல பகுதிகள் பலத்த காற்றையும் கனமழையையும் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்