பிரித்தானிய சாலையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்: 2 பேர் பலி.. 4 பேர் கவலைக்கிடம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் Huntworth பகுதியில் நேர்ந்த சாலை விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் Huntworth பகுதியில் உள்ள அதிவேக சாலையில் இன்று காலை 8.30 மணிக்கு (உள்ளுர் நேரப்படி) லாரி ஒன்று அருகில் சென்ற காரின் மீது மோதி நின்றுள்ளது.

இதில் அடுத்தடுத்து வரிசையாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பெரும் விபத்தாக நடந்தேறியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இரண்டு ஏர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடைபெற்றது முதலே தொடர்ச்சியான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் இரு பக்கங்களும் மூடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்