சிகரெட் கொடுக்காததால் இளம் தாய்க்கு பிரித்தானியாவில் நேர்ந்த கொடுமை

Report Print Trinity in பிரித்தானியா
277Shares
277Shares
ibctamil.com

பிரித்தானியாவில் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 5 குழந்தைகளின் தாய் ஒருவரை 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று மோசமாக தாக்கி மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் டவுனிங் குரோவ், கிழக்கு ஹல் பகுதியில் லிசா சீசன்ஸ் (37) எனும் பெண்மணி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு குடும்ப நிகழ்வுக்காக தனது வீடு அருகில் உள்ள பப்பிற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

லிசா சீசன்ஸ் தாக்கப்படும் முன் ஆண் மற்றும் பெண் இணைந்த 15 பேர் கொண்ட கும்பல் அவரிடம் மூன்று முறை சிகரெட் கேட்டுள்ளது.

மூன்று முறையும் மறுத்த லிசா தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என தெரிவித்திருக்கிறார். அதன்பின்தான் அந்தக் கும்பல் அவரைத் தாறுமாறாகத் தாக்கி உள்ளது.

இது பற்றி லிசா கூறுகையில், ஆணும் பெண்ணுமாக இருந்த கும்பல் முதலில் என்னைக் கற்பழித்துவிடுவதாக மிரட்டியது. அவர்களின் முகங்கள் தெரியாதவண்ணம் முகமூடி அணிந்திருந்தனர்.

அவர்களை விட்டு விலகி நான் நடக்க முயல்கையில், திடீரென என் இடுப்பில் உதைத்து கீழே தள்ளினர். தொடர்ந்து அவர்கள் தாக்கியதில் நான் என் சுயநினைவை 20 நிமிடங்களுக்கு இழந்து விட்டேன். அதன்பின் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என கூறினார்.

இன்னமும் பயத்திலிருந்து விடுபடாத லிசாவின் தாய் கூறுகையில், லிசாவைக் காப்பாற்ற போன அவரது கணவர் லின் அந்த குண்டர்களின் கைகளில் சிக்கிக் கொண்டார் என்றும், அவர்கள் அடித்த அடியில் லிசா இறந்து விடுவார் என தான் நினைத்ததாகவும் கூறினார்.

இந்த மோசமான தாக்குதல் சம்பவத்தில் லிசாவிற்கு விலா எலும்புகள் உடைந்தன, மேலும் அவரது தலையில் ஏற்பட்ட வெட்டுக்கள் மற்றும் அவரது இடுப்புக் காயங்கள் போன்றவையால் அவர் குணமாக இன்னமும் ஆறு வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்ஸ்பைட் பொலிஸ், திருமதி சீசனின் மீதான தாக்குதல் பற்றி அறிந்திருப்பதாகவும் விசாரணை தொடர்கிறது என்றும் கூறினார்.

அந்தக் கோரமான தாக்குதலுக்குப் பிறகு நடக்கவே சிரமப்படும் லிசா இப்போது தெருவைப் பார்த்தாலே பயப்படுகிறார்.

அவரை அடித்த அந்த கும்பலின் பெற்றோர்கள் தங்களது வளர்ப்பைக் கண்டு வருந்த வேண்டும், இது போன்ற நபர்கள் தெருவில் நடமாடவே கூடாது எனும்படியான தண்டனை பெற வேண்டும் என்கிறார் லிசா.

கடந்த வாரம் முதல் இது போன்ற சமூகத்திற்கு எதிரான செயல்கள் நடந்து வருவதாகத் தெரிவித்த ஹார்ஸ்பைட் பொலிஸ், சம்பந்தப்பட்ட அந்த கும்பலை சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம் என்று கூறினர், மேலும் இந்தக் குழுவை கண்டுபிடிக்க மக்களும் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்