44 வயது பெண் ஒருவரின் கை எலும்பு ஒன்று 18 மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து காணாமல் போவதைக் கண்டு Edinburgh மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் குறையாத தோள் பட்டை வலியால் மருத்துவர்களின் உதவியை நாடினார் அந்தப் பெண்.
மருத்துவர்கள் அந்த வலி எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பினர்.
முதலில் எடுக்கப்பட்ட ஸ்கேன், மேல் கை எலும்பில் ஒரு கொப்புளம் இருப்பதைக் காட்டியது.
ஒரு வேளை அவருக்கு புற்று நோய் இருக்கலாம் என்று சந்தேகித்த மருத்துவர்கள் புற்று நோய்க்கான பரிசோதனைகளை செய்தனர். ரிசல்ட் புற்று நோய் இல்லை என்று வந்தது.
தொடர்ந்து அந்தப் பெண் கடுமையான வலியால் துடித்துவந்தார். பின்னர் பல மாதங்களுக்குப் பின் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இரத்தக் குழாய்களில் புற்று நோய் இருப்பது தெரியவந்தது.
18 மாதங்களுக்குப் பின் எடுக்கப்பட்ட ஸ்கேன் அவருக்கு Gorham-Stout நோய் இருப்பதைக் காட்டியது.
இந்த கண்டுபிடிப்பை நோயியல் வல்லுநர்கள் உறுதி செய்தனர். இந்த நோயின் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும், இந்நோய் முதுகெலும்புக்கும் பரவலாம் என்றும் இதனால் நுரையீரலைச் சுற்றிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம் என்றும் கழுத்துக்கு கீழே செயல்படாமல் போகலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் “மறையும் எலும்பு நோய்” என்றும் மருத்துவர்களால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.