எப்போது பார்த்தாலும் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடக்கும் பிளைகளைப் பார்த்து சலித்துப்போன ஒரு தந்தை, தனது பிள்ளைகளுடன் பேசுவதற்காகவே ஒரு தனி யூ டியூப் சேனல் உருவாக்கியுள்ள சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவின் Hull நகரைச் சேர்ந்தவர் Justin Smith (43). இவருக்கு இரண்டு மகள்கள், மூன்று மகன்கள்.
இத்தனை பிள்ளைகளுடன் வீடு விளையாட்டும் கொண்டாட்டமுமாக இருக்கும் என்று பார்த்தால், அப்படியில்லை.
வீட்டில் எப்போதும் ஒரே அமைதி.
பிள்ளைகள் மொபைல் போனும் ஹெட் போனுமாக யூ டியூபிலேயே மூழ்கிக் கிடந்தார்கள்.
அவர்களது கவனத்தைப் பெற ஏதேதோ செய்து பார்த்தார், Justin Smith.
ஒன்றும் வேலைக்காகவில்லை.
ஆகவே அவர் தனக்கென்று ஒரு தனி யூ டியூப் சேனலை உருவாக்க முடிவு செய்தார்.
அவரது முதல் வீடியோவில் ”ஹாய், என் பெயர் ஜோ டாடி, என் பிள்ளைகள் எப்போதும் யூ டியூபிலேயே மூழ்கிக் கிடப்பதால் இதுதான் அவர்களுடன் பேசுவதற்கான ஒரே வழி என்று முடிவு செய்ததால்தான் இந்த சேனலை உருவாக்கியுள்ளேன்” என்று கூறினார்.
இப்படி ஒரு தனி சேனலை உருவாக்கியிருந்தாலும், ”என் பிள்ளைகள் நாள் முழுவதும் பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களுக்கு சும்மாயிருக்க கொஞ்சம் நேரம்தான் கிடைக்கிறது. அதனால்தான் அவர்கள் யூ டியூபிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்”.
“அதனால் என் பிள்ளைகளை குறை சொல்ல மாட்டேன், வேடிக்கைக்காத்தான் இதைச் செய்தேன்” என்று பிள்ளைகளுக்கு வக்காலத்தும் வாங்குகிறார் இந்த அன்புத் தந்தை.