பிரித்தானியாவில் இரத்த புற்றுநோய் காரணமாக இளம்தாய் கிறிஸ்துமஸ் அன்று உயிரிழந்த நிலையில் இறக்கும் முன்னர் மனதை உருக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மெர்சிசைட் கவுண்டியை சேர்ந்தவர் கிரிஸ்டன் ஹவுக்சே (23), இவருக்கு 15 மாத பெண் குழந்தை உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கிரிஸ்டன் கால்களில் புண் ஏற்பட்டுள்ளது, அது சாதாரண புண் என நினைத்து விட்டுள்ளார்.
ஆனால் புண் அதிகமாக ஆரம்பித்த நிலையில் அவர் குடும்பத்தார் மருத்துவரிடம் செல்ல வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து மருத்துவரிடம் கிரிஸ்டன் சென்ற நிலையில் பலவேறு உடல் பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு இரத்த புற்றுநோய் உள்ளது கண்டுப்பிடிக்கபட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கிரிஸ்டன் சிகிச்சை பலனின்றி கடந்த 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தில் உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவை கிரிஸ்டன் பதிவிட்டுள்ளார்.
அதில், எனக்கு இரத்த புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்கான சிகிச்சையை எடுத்து வருகிறேன்.
பரிதாபப்பட்டு அழுவதற்காக இதை சொல்லவில்லை, உடலில் எதாவது வித்தியாச அறிகுறி ஏற்பட்டால் அதை உதாசீனப்படுத்த கூடாது, விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
நான் மருத்துவர்களிடம் செல்லவே மாட்டேன், ஆனால் என் குடும்பம் தான் என்னை மருத்துவர்களிடம் செல்ல அறிவுறுத்தியது, இதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
குடும்பம், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு தனி தனியாக நன்றி சொல்ல முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
கிரிஸ்டன் தந்தை நீல் கூறுகையில், என் மகள் கால்களில் புண் ஏற்பட்ட போது அது எதற்கான அறிகுறி என கூகுள் செய்து பார்த்தாள்.
அதில் ரத்த புற்றுநோய் என வந்தும் அதை பெரிதாக அவள் எடுத்து கொள்ளவில்லை.
காரணம் அவள் உடலில் அப்போது வேறு தொந்தரவு எதுவுமில்லை. கிரிஸ்டன் பேஸ்புக்கில் தன் நிலை குறித்து பதிவிட்டது ஆச்சரியமாக உள்ளது.
காரணம் அவர் தனிப்பட்ட விடயங்களை அதிகம் பகிரமாட்டார். மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்திருக்கலாம்.
அவளுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது, குறைவாகவே மது அருந்துவாள். அன்பான தாயாக, மகளாக, பேத்தியாக எங்கள் குடும்பத்தில் இருந்தாள் என உருக்கமாக கூறியுள்ளார்.