பி.பி.சி வானொலி நிறுவனத்திற்காக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை, பிரித்தானிய இளவரசர் ஹாரி பதற்றத்துடன் பேட்டி எடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
பிரபல செய்தி தொலைக்காட்சியான பி.பி.சிக்கு சொந்தமான பி.பி.சி.ரேடியோ-4 அலைவரிசைக்காக, பிரித்தானிய இளவரசர் ஹாரி கவுரவ நேர்காணலராக நியக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரை பேட்டி எடுக்கும் பொறுப்பு இளவரசர் ஹாரிக்கு அளிக்கப்பட்டது. அதன்படி, இளவரசர் ஹாரியும் அந்த பொறுப்பை ஏற்று ஒபாமாவை பேட்டி கண்டுள்ளார்.
அந்த பேட்டியில், ‘நான் பொறுமையாக பேசக் கூடியவன், இந்த பேட்டிக்காக வேகமாக பேச வேண்டுமா? என்று ஒபாமா கேட்க - அதற்கான அவசியமில்லை’ என ஹாரி பதிலளிக்கிறார்.
மேலும், பிரித்தானியா நாட்டு ஆங்கிலத்தின் சாயலில் நான் பேச வேண்டுமா? என்று ஒபாமா சிரித்தபடியே கேட்க, ஹாரிஸ் பதற்றத்துடன் சமாளிக்கிறார்.
இந்த உரையாடலின் முன்னோட்டம் வீடியோவாக, இளவரசர் ஹாரியின் கென்சிங்டன் பேலஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த முழுப்பேட்டி, வருகிற 27ஆம் திகதி பி.பி.சி.ரேடியோ-4 அலைவரிசையில் ஒலிபரப்பாகும் என கூறப்படுகிறது.
இந்த நேர்காணலில், அமெரிக்க ஜனாதிபதி பதவிக் காலத்தின் கடைசி நாளில் ஒபாமாவின் மனநிலை, ஓய்வுக்கு பிறகு அவரது எதிர்கால திட்டம் போன்றவற்றைப் பற்றி ஒபாமா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.