பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு

Report Print Fathima Fathima in பிரித்தானியா

ஐக்கிய இராச்சியம் (யுகே) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பொழுது, யுகேயில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள Settlement Scheme of EU Citizens தொடர்பாக மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் எவ்வாறு செயற்படும் என்பது பற்றியே மேலதிக விபரங்களை யுகே அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஆணையகத்திற்கு அனுப்பியுள்ள இந்த ஆவணத்தில் (Technical Document), இந்த புதிய வடிவடைப்பு எவ்வாறு வழங்கப்படும், எவ்வாறு செலவுகள் குறைந்ததாக இருக்கும் மற்றும் எவ்வாறு இலகுவாக பாவனைக்கு உட்படுத்தப்படும் போன்ற விடயங்களை மிகவும் விரிவாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய இராச்சியம் (யுகே) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் நவம்பர் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற்றுள்ளன. அதற்கு முன்னதாக அரசாங்கம் இந்த ஆவணத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பிரித்தானிய அரசாங்கம் இறுதியாக கையெழுத்திடும் பின்வாங்கும் உடன்படிக்கையில் (Withdrawal Agreement) உள்ள விடயங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும். தொடர்ந்தும் யுகேயில் வசிக்க விரும்புபவர்களுக்கு போதுமானளவு கால அவகாசம் கொடுக்கப்படும். யுகே விலகியதிலிருந்து இரண்டு வருடங்கள் வரைக்கும் இந்த கால அவகாசம் வழங்கப்படும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்பு மேற்கொள்ளும் விண்ணப்பங்கள் சிறிய தொழில்நுட்ப விடயங்களை (Minor Technical Issues) வைத்து மறுக்கப்படமாட்டாது. பொருத்தமான இடங்களில், முடிவெடுப்பவர்கள் தங்களுடைய விருப்புரிமையை (Discretion) பாவித்து முடிவெடுப்பார்கள். இந்தப் புதிய முறையின் கீழ் அதிக ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டி ஏற்படாது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் கைவிரல் அடையாளங்கள் கொடுக்க வேண்டியும் ஏற்படாது.

முடிவுகள் இறுதியில் கையெழுத்திடப்படும் பின்வாங்கும் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே எடுக்கப்படும். அத்துடன், பிரஜைகளுக்கு முடிவுகள் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேல்முறையீடு செய்வதற்குரிய உரிமையும் (Appeal Rights) வழங்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையை முன்னிலைப்படுத்தியே பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆவணத்தையும் சமர்ப்பித்திருக்கின்றது என பல விமர்சனங்கள் எழுகின்றன. அத்துடன் ஏற்கனவே இருக்கின்ற சட்டவிதிகளின் கீழ் இம்மாதிரியான கொள்கைகள் இருக்கின்றன.

இருப்பினும், முடிவெடுப்பவர்கள் அவற்றை கருத்திற்கொள்ளாமல் விண்ணப்பங்களை மறுப்பது வழக்கம். ஆகவே இந்த மாதிரியான புதிய கொள்கைகளை உள்விவகாரத் திணைக்களம் நடைமுறையில் எவ்வாறு பின்பற்றப்போகின்றது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த பத்திரிகை அறிக்கையின் முழு ஆங்கில வடிவத்தையும், பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆவணத்தின் முழுவடிவத்தையும் நீங்கள் இந்த இணைப்பை அழுத்திப் பார்வையிடலாம்.

https://jayvisva.co.uk/wp-content/uploads/2017/11/Email-from-the-Home-Office-re-EEA-Citizens.pdf

தகவல் - Jay Visva Solicitors
மேலதிக தொடர்பு எண் - (+44) 020 8573 6673

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்