லண்டன் சுரங்க ரயில் வெடிகுண்டு தாக்குதல்: இன்னொரு இளைஞர் கைது

Report Print Arbin Arbin in பிரித்தானியா
300Shares

லண்டன் சுரங்க ரயில்நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நேற்று 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று இன்னொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 15 அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக இன்னொரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். கைதானவரின் வயது 21.

மேற்கு லண்டன் புறநகரான ஹவுன்ஸ்லோவில் இருந்த இந்த இளைஞரும் வெடிகுண்டு தாக்குதலோடு தொடர்புள்ளராக சந்தேகிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் நேற்று நள்ளிரவுக்கு முன்னர் லண்டன் மாநகர பொலிசாரால் பிரித்தானிய நாட்டின் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சனிக்கிழமை அன்று லண்டன் பொலிசார் டோவர் துறைமுகத்தில் 18 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

லண்டனுக்கு வெளியில் உள்ள ஒரு சிறிய நகரமான சன்ஸ்பரியில் உள்ள அவருக்கு தொடர்பான இடத்தில் சோதனையிடப்பட்டது. அங்குள்ள சில குண்டுவெடிப்பு தொடர்பான கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன் ரயில்நிலையத்தில் வெள்ளியன்று ரயில் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பக்கெட் வெடிகுண்டு வெடித்து எரிந்தது.

இந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த வெடிகுண்டு முழுவதும் வெடிக்காமல் செயலிழந்தது.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது, இதன் துணை அமைப்பொன்று இந்த குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்ததாக அது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்