தண்ணீரில் மிதக்கும் பிரித்தானியா: மக்கள் பரிதவிப்பு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் தொடர் மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சில தினங்களுக்கு முன்னர் வரை வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. இதனால் மக்கள் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் திடீரென கன மழை பெய்ய ஆரம்பித்த சில மணி நேரங்களில் மத்திய லண்டன், ஹாம்ஷயர், சுரே போன்ற இடங்களில் தண்ணீர் ஆறாக ஓடி வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. லண்டன் ஈஸ்டனை நோக்கி சென்ற ஒரு ரயில் மண் சரிவால் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு எதிரில் வந்த இன்னொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அடிபடவில்லை.

கடும் மழையால் ரயில்கள் தாமதமாகவும், சில ரயில்கள் இயக்கபடாது என ரயில்வே நிர்வாகம் ட்விட்டரில் தெரிவித்தது.

இது பற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், கடும் மழையில் ஏற்பட்ட மண் சரிவில் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. பொறியியலாளர்கள் பழுதை சரி பார்க்கிறார்கள், விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் ரயில்கள், ரயில்வே நிலையம் பாதிக்கப்பட்ட புகைப்படங்கள் அதிக அளவில் உலா வருகின்றன.

மேலும் ஒருவர் கூறுகையில், இடி, மின்னல் ஏற்பட்டதில் இரயில்வே சிக்னல் பாதிக்கபட்டுள்ளது. லெவல் கிராசிங் இடத்தில் இருக்கும் பல முக்கிய பொருட்கள் சேதமடைந்துள்ளது என்றும் இது சரியாக சில மணி நேரங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளார்.

சாலையும் தண்ணீரில் மிதந்ததால் போக்குவரத்து நெரிசலாகி சில விபத்துகள் ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், காலை 5.20 மணிக்கு இரண்டு கனரக வாகனமும், இரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் வெள்ளப்பெருக்கால் பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இடி மின்னலுடன் கொட்டிய மழை வெள்ளதால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் பாதிப்புகளை பிரித்தானியவாசிகள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வானிலை ஆய்வாளர் மார்டின் கூறுகையில், 32.3 மில்லி மீற்றர் மழை மூன்று மணி நேரத்தில் பெய்துள்ளது என்று கூறினார். மேலும் புயல் வட கிழக்கு பக்கம் நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments