பிரித்தானிய தலைநகரான லண்டனில் 16 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள Peckham என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு பின்னர் சுமார் 7.19 மணியளவில் அப்பகுதி பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.
தகவலை பெற்று பொலிசார் அங்கு சென்றபோது, 16 வயதான வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடியுள்ளார்.
வாலிபரின் மார்பு பகுதியில் எண்ணற்ற கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி வாலிபர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியை பொலிசார் சீல் வைத்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.
விசாரணையை தொடங்கியுள்ள பொலிசார் கொலையின் பின்னணி குறித்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
கடந்த புதன் கிழமை அன்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் லண்டனில் வாலிபரால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.