மிகக்கடினமானதுதான்... ஆனால் முயற்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை - இஸ்ரோ சிவன்

Report Print Kavitha in தொழில்நுட்பம்

விக்ரம் லேண்டர் இதுவரை கண்டறியபடாத சூழலில் தேடும் முயற்சியை தொடருவோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தரை இறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்த நிலையில் மெல்ல, மெல்ல தரை இறங்க முடியாமல் அதிவேகமாக வந்து கீழே விழுந்து விட்டது தெரிய வந்தது.

இதனால் தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு அறுந்து போன தகவல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா ஆகியவை முயற்சித்து வருகின்றன.

இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ விட்டுவிடவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியம் இல்லை.

நிலவில் இப்போது இரவுப்பொழுதாகும். அங்கு இரவுப்பொழுது முடிந்த பின்னர் நாங்கள் மீண்டும் தொடங்குவோம்.

பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவது என்பது மிகக்கடினமானது.

அதிவேகத்தில் வந்துதான் லேண்டர் விழுந்திருப்பதனால் விழுந்த அதிர்வால் அதனுள் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு ஆன்டெனா எங்கு நோக்கி இருக்கிறது என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

அந்த வகையில் பார்த்தால், விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவது என்பது மிகக்கடினமானதுதான். ஆனால் முயற்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை” என கூறியுள்ளார்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்