தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: கொடும் பனியில் 7 மணி நேரம் உயிருக்கு போராடிய நபர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஹெகொப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில், விமானி கொல்லப்பட்ட நிலையில், பயணி ஒருவர் கொடும் பனியில் 7 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

வலாய்ஸ் மண்டலத்தின் எல்லையில் இத்தாலிய நகரத்தின் அருகாமையில் இந்த ஹெலிகொப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரவு சுமார் 8 மணி அளவில் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர உதவிக்குழுவினர் ஹெலிகொப்டர் உதவியுடன், சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், சுவிஸ் ராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டு, விபத்து நடந்த பகுதியில் களமிறக்கப்பட்டனர்.

உள்ளூர் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, ஹெலிகொப்டர் விமானி 59 வயதான Alfredo விபத்தில் சிக்கி மரணமடைந்ததாகவும், எஞ்சிய பயணி ஒருவர் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக, கொட்டும் பனியில் உதவி கேட்டு போராடியபடி இருந்துள்ளார்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த நபர் ஹெலிகொப்டர் மூலம் பெர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வலாய்ஸ் மண்டல பொலிசாருடன் இத்தாலிய பொலிசாரும் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்